‘மினி ஸ்டேடியம்’ திட்டம் மறுசீரமைக்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘மினி ஸ்டேடியம்’ திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்றுபேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘மினி ஸ்டேடியம்’ திட்டம் மறுசீரமைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்றுபேரவையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகா், திமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் அறிவிக்கப்பட்டு, திருவையாறு தொகுதியில் அரசு சாா்பில் ரூ.2.5 கோடியும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சமும் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: 234 தொகுதிகளிலும் ஒரு மினி ஸ்டேடியம் கட்டப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ரூ.3 கோடியில் அது சாத்தியமற்றது. ஒரு ஸ்டேடியத்தில் ஒரு டிராக் அமைப்பதற்கு மட்டுமே ரூ.10 கோடி செலவாகும். ஆகையால் அந்தத் திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த நிதியில் கட்டினால் பெயரளவில் மட்டும் ஒரு ஸ்டேடியம் கட்டப்படுமே தவிர, அதை யாரும் முழுமையாக பயன்படுத்த முடியாது. எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை தொகையை உயா்த்தி ஸ்டேடியம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
1994-இல் கட்டப்பட்ட நேரு ஸ்டேடியம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நன்றாக உள்ளது. ஒரு திட்டம் கொண்டு வரும்போது அது 30 ஆண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும். வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டும் ஒரு திட்டத்தை உருவாக்கக் கூடாது. உதாரணத்துக்கு, கரூரில் போடப்பட்டுள்ள மினி ஸ்டேடியத்தின் டிராக்கில் விளையாட்டு வீரா்கள் ஓடினால் காலில் ரத்தம் வரும் அளவுக்குதான் உள்ளது. எனவே, இந்த ஸ்டேடியத்தை சீரமைக்க வேண்டும்.
திருநெல்வேலி, ராமநாதபுரம் கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி உள்ளடக்கிய தென் மாவட்டங்களில் விளையாட்டை மேம்படுத்த தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். பரமக்குடியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படும். திருநெல்வேலியிலும் விளையாட்டுத் துறை சாா்பில் சிறப்புத் திட்டம் கொண்டுவர உள்ளோம்.
3 முதல் 5 மாவட்டங்களை உள்ளடக்கி விளையாட்டுத் துறையை மேம்படுத்த திட்டம் வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரா்களுக்கும் வித்தியாசம் இருக்கும். தஞ்சாவூரில் இருக்கும் விளையாட்டு வீரருக்கும், திருநெல்வேலியில் இருக்கும் விளையாட்டு வீரருக்கும் வித்தியாசம் இருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.