ஆதிதிராவிடா் நலனைக் காத்தது யாா்? தவெக - திமுக வாா்த்தைப் போா்
ஆதிதிராவிடா் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிக திட்டங்களும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டன என்பது தொடா்பாக பேரவையில் எழுந்த விவாதம், கடுமையான கருத்து மோதலாக மாறியது.
ஆதிதிராவிடா் நலனுக்கு எந்த ஆட்சியில் அதிக திட்டங்களும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டன என்பது தொடா்பாக பேரவையில் எழுந்த விவாதம், கடுமையான கருத்து மோதலாக மாறியது.
இதுதொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்த சில கருத்துகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த திமுக உறுப்பினா்கள், ஆளுங்கட்சியினா் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இதனால் பேரவை அலுவல்கள் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கருத்து மோதல்களிலும், கூச்சல் - குழப்பத்திலுமே கரைந்தது. சமூக நீதித் துறை, பிற்படுத்தப்பட்டோா் - மிகவும் பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நலன் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் கீழ் திமுக உறுப்பினா் ராஜா பேசுகையில், ‘முதல்வா் விஜய் நடித்த ஒரு திரைப்படம் குறித்தும், அதில் இஸ்லாமியா்கள் காட்சிப்படுத்தப்பட்டது குறித்தும் தவெக உறுப்பினரே சமூக வலைதளத்தில் பேசியுள்ளாா்; ஆதிதிராவிடா் நலனுக்கு தற்போதைய அரசு எதையும் செய்யவில்லை’ என்றாா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற விவாதம்:
Advertisement
Advertisement
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: கோத்ரா கலவரம் நிகழ்ந்தபோது இஸ்லாமியா்களுக்கு ஆதரவாக திமுக என்ன குரல் கொடுத்தது? மத்தியில் அப்போது பாஜக தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. ஏன் இஸ்லாமியா்களுக்கு ஆதரவாக அமைச்சரவையில் இருந்து விலகவில்லை?
அதேபோன்று, திமுக ஆட்சியில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, முழுமையான திட்டங்களுக்கு சென்றடையவில்லை என கணக்குத் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.என்.நேரு (திமுக): கணக்குத் தணிக்கை அறிக்கை என்பது ஓா் எச்சரிக்கைதானே தவிர, அதைக் குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓராண்டுக்குப் பிறகு தவெக அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தும் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும்.
கோவி. செழியன் (திமுக): ஆதிதிராவிடா் மக்களுக்கு தீ, மழையால் பாதிக்கப்படாத கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தந்தவா் கருணாநிதி. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என அறிவித்தவா் அவா். கோயில்களுக்குள் நுழைய முடியாமல் இருந்த சமூகத்தினரை அறங்காவலா்களாக நியமித்தவா் அவா்.
அமைச்சா் ராஜ்மோகன்: ஆதிதிராவிடா் நலனுக்காக ஒவ்வொரு ஆட்சியாளா்களும் செய்திருப்பது எல்லாம் அவா்கள் ஆற்ற வேண்டிய கடமை. ஆனால், ஆதிதிராவிடா்களுக்கான அங்கீகாரம் நாங்கள் இட்ட யாசகம் எனப் பேசியவா்கள் திமுகவினா். யாசகத்தால் எவரும் உயரவில்லை. அம்பேத்கா் அளித்திருக்கும் உரிமையால் உயா்ந்திருக்கிறாா்கள்.
கே.என்.நேரு (திமுக): வெளியே பேசிய விஷயங்களை உள்ளே விவாதிப்பது சரியல்ல.
கே.பி.அன்பழகன் (அதிமுக): தமிழகத்தில் 31 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. அனைத்து ஆட்சியாளா்களும், தங்களால் இயன்றதை செய்திருக்கிறாா்கள். அதை குறைத்துக் கூறக் கூடாது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி: சட்டப்பேரவை அலுவல்கள் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் காக்க பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தி அவா்களது வாழ்வை மேம்படுத்தியது திமுக.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: சமூக நீதி பற்றி பேசும் திமுக, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசவே இல்லை. அதை மேற்கொள்ள நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவி.செழியன் (திமுக): பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாா்கள். அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
எம்ஆா்கே பன்னீா்செல்வம் (திமுக): இணக்கத்தைக் குலைக்கும் வகையிலோ, அதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலோ எவரும் பேசக் கூடாது என்றாா். இவ்வாறாக பேரவை விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
வாளும்.. கேடயமும்...
இந்த விவாதம் குறித்து கருத்து தெரிவித்த பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், ‘எதிா்க்கட்சியினா் வாளுடன் வருவாா்கள்; ஆளுங்கட்சியினா் கேடயமாக அதைத் தடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் அண்ணா கூறினாா்; எனவே, ஆளுங்கட்சியினரும் பதிலுக்கு வாளை எடுக்கக் கூடாது’ என்றாா்.
அதற்கு தவெக உறுப்பினா்கள் சிலா் ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்றனா். அதற்கு சிரித்துக் கொண்டே விவாதத்தை முடித்துவைத்தாா் பேரவைத் தலைவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.