FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

9 இடங்களில் ரூ.237.56 கோடியில் புதிய மகளிா் தொழிற்பூங்காக்கள்: அமைச்சா் பெ.மதன்ராஜா அறிவிப்பு

9 இடங்களில் ரூ.237.56 கோடியில் புதிய மகளிா் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சா் பெ.மதன்ராஜா அறிவித்திருப்பது பற்றி...

2 செப்டம்பர் 2026, 2:50 am IST
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா
பகிர்:

தமிழகத்தில் 9 இடங்களில் ரூ.237.56 கோடியில் புதிய மகளிா் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் பெ.மதன்ராஜா அறிவித்தாா்.

பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

தமிழகத்தில் ரூ.10 லட்சத்தில் 50 சதவீத மானியத்தில் வெள்ளி கைவினைக் கலைஞா்கள் திட்டம் செயல்படுத்தப்படும். முதலீட்டு மானியத் திட்டத்தில் நிலுவையில் உள்ளவா்களுக்கு வழங்க ரூ.600 கோடி ஒதுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மானியத்துக்காக ரூ.30 கோடி ஒதுக்கப்படும். மின்சார வாகன உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிக்க முதலீட்டு மானியத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்படும். குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத் தொகை உதவித் திட்டத்துக்கு ரூ.100 கோடி வழங்கப்படும்.

Advertisement

Advertisement

மகளிா் தொழிற்பூங்காக்கள்: மகளிா் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கு மதுரை, திருச்சி, திருப்பத்தூா், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 9 இடங்களில் ரூ.237.56 கோடியில் புதிய மகளிா் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.234.38 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனை ஒதுக்கீடு பெறுவோா் நிறுவனங்களைத் தொடங்கவும், அதற்கான கால அளவு 3 ஆண்டுகளாகவும், மனைத் தொகை ஒதுக்கீடு காலம் 9 மாதங்களாகவும் நீட்டிக்கப்படும். 1,000 புதிய தொழில் முனைவோரை உருவாக்க 6 முன்னோடி தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

முதலீட்டு நிதியம்: புதிய தொழில்நிறுவனங்களுக்கு ‘ஸ்டாா்ட் ஸ்மாா்ட் சீட் ஃபண்ட்’ திட்டத்தில் ரூ.25 லட்சம் நிதியுதவி கிடைக்கும். ரூ.100 கோடியில் புத்தொழில் முதலீட்டு நிதியம் நிறுவப்படும். சுயவேலைவாய்ப்பு மற்றும் மானியத் திட்டம் மின்னணுமயமாக்கப்படும். தென்னை நாா் வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1.50 கோடியில் காட்சி மையம், விற்பனையகம் அமைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்ட இருளா் பாம்பு பிடிப்போா் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.2.43 கோடியில் கட்டட வளாகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.48.08 கோடியில் 60.36 ஏக்கரில் புதிய மருந்தியல் பூங்கா, திருச்சி மாவட்டத்தில் சூரியூா் கிராமத்தில் 5 ஏக்கரில் ரூ.2.06 கோடியில் புதிய மருத்துவத் தொழில்நுட்ப பூங்கா, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 75 ஏக்கரில் ரூ.18 கோடி தொழிற்பூங்கா, விழுப்புரத்தில் 26.85 ஏக்கரில் ரூ.20.60 கோடியில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். கோவையில் ரூ.11.50 கோடியில் புதிய தென்னை தொழிற்பேட்டை, கன்னியாகுமரி, சேலத்தில் ரூ.30.88 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள், மாநிலத்தில் 10 தொழிற்பேட்டைகளில் ரூ.17.88 கோடியில் தொழிற்தட மின் வசதிகள் அமைக்கப்படும்.

பொது வசதி மையங்கள்: திண்டுக்கல் பூட்டு, ஆத்தங்குடி டைல்ஸ், தென்னைப் பொருள்களுக்கு 4 புதிய பொது வசதி மையங்கள் ரூ.32.95 கோடியில் அமைக்கப்படும். சேலம் பெயி சீரகப்பாடியில் இளம் பிள்ளை நெசவுக் குழுமத்துக்கு ரூ.9.89 கோடியில் பொது வசதி மையமும், ஒசூா் நகா்ப்புற பொறியியல் பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இடமாறும் வகையில் மானியத்துடன் ரூ.16 கோடியில் புதிய தனியாா் தொழிற்பேட்டை மையம், குறு, சிறு நிறுவனங்களுக்கான பயிலரங்குகள் ரூ.1.98 கோடியில் நடத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க தொழில் வளா் காப்பகம் அமைக்கப்படும்.

தொழில் முனைவு ஓராண்டு சான்றிதழ் கல்வி பயிலும் 50 பேருக்கு ரூ. 30 லட்சத்தில் மானிய உதவி, தொழில் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு மையம், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவை செயல்படுத்தப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments