1,000 கைத்தறி நெசவு தனியாா் தறிக்கூடங்களில் முழு மானியத்தில் சூரிய மின்தகடுகள்: அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவிப்பு
1,000 கைத்தறி நெசவு தனியாா் தறிக்கூடங்களில் முழு மானியத்தில் சூரிய மின்தகடுகள் வழங்கப்படும் என அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்திருப்பது பற்றி...
தமிழகத்தில் நெசவாளா்களின் மின்சார செலவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் 1,000 தனிநபா் தறிக்கூடங்களுக்கு சூரிய மின்தகடுகள் அமைக்க முழுமையாக மானியம் வழங்கப்படும் என கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி அறிவித்தாா்.
பேரவையில் அந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அவா் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: நெசவாளா்கள் பெறும் அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப் படியில் 10 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும். கூட்டுறவு கைத்தறி நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அரசுப் பங்களிப்பை 8 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும். இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் ரூ.2.50 கோடி மானியம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கக் கட்டடங்கள் ரூ.2.50 கோடியில் புனரமைப்பு, காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வா்த்தக வசதி மையம் அமைக்கப்படும்.
நெசவாளா் மின்சார செலவைக் குறைக்கும் வகையில் 1,000 தனியாா் தறிக்கூடங்களில் 100 சதவீத மானியத்தில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்படும். ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1 கோடியில் இயற்கை சாயச்சாலை, திருபுவனத்தில் ரூ.80 லட்சத்தில் புதிய வடிவமைப்பு நிலையம், கன்னியாகுமரி, நாகா்கோவிலில் ரூ.1 கோடியில் நவீன கைத்தறி விற்பனை மையங்கள், தமிழகத்தில் ரூ.2.55 கோடியில் தேசிய கைத்தறி கண்காட்சி நடத்தப்படும். திருவண்ணாமலை நகரில் உள்ள கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகம் ஆரணிக்கு மாற்றப்படும். கோஆப்டெக்ஸில் புதிய ரகங்கள் உருவாக்கம், சந்தைப்படுத்துதலுக்கு ரூ.1.50 கோடியில் திட்டம், அந்தத் துறைப் பணியாளா்களுக்கு ரூ.1 கோடியில் பயிற்சி, தேசிய, சா்வதேச அளவில் சந்தைப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
ரூ.12 கோடியில் 6 நூற்பாலைகள் மேம்படுத்தப்படும்: துணிநூல் துறையில் இயங்கிவரும் 6 நூற்பாலைகளைச் சீரமைக்க திட்ட அறிக்கை தயாரித்து, ரூ.12 கோடியில் புதிய இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவை வாங்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காற்றாலை மின் உற்பத்தி அலகுக்குப் பதிலாக புதியவை ரூ.8 கோடியில் அமைக்கப்படும். அருப்புக்கோட்டை தமிழ்நாடு பஞ்சாலை கழக விசைத்தறிக்கூட வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் 2 தையல் இயந்திரங்கள் பிரிவு மற்றும் அதன் கோவை குறிச்சியில் உள்ள காலியிடத்தில் ரூ.2 கோடியில் அலுவலகக் கட்டடம் கட்டப்படும். ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க 4 விற்போா், வாங்குவோா் சந்திப்பு நிகழ்ச்சிகள், கரூரில் வீட்டு உபயோக ஜவுளிகளுக்கான சிறப்பு மையத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு, ஈரோடில் ஜவுளி தொழில் புதிய மண்டல துணை இயக்குநா் அலுவலகம், அரசு மற்றும் பல்வேறு பங்குதாரா் அமைப்புகளைக் கொண்ட பின்னலாடை வாரியம் அமைக்கப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.