FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதா? பேரவையில் தங்கம் தென்னரசு விளக்கம்!

மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு திமுக விளக்கம்...

1 செப்டம்பர் 2026, 12:28 pm IST
கருணாநிதி, காமராஜர் | தங்கம் தென்னரசு - EPS
பகிர்:

மெரீனாவில் காமராஜருக்கு இடம் மறுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் குழுத் தலைவர் தாரகை கத்பட் திங்கள்கிழமை பேசுகையில், “பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் கேட்டோம், கிடைக்கவில்லை. அதை தாங்கிக் கொண்டு சிரித்த முகத்துடன் சென்றோம்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தாரகை கத்பட் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் இன்று பேசியதாவது:

Advertisement

Advertisement

“திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது காமராஜருக்கு மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் தாரகை கத்பட் பதிவு செய்துள்ளார்.

வரலாற்றிலும் பேரவையிலும் உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகக் கூடாது. 1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைந்த செய்தி கேட்டவுடன் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரின் உடலை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விவாதித்தார்கள். அந்த சமயத்தில் காமராஜர் வெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும் கிடையாது, தேசிய தலைவர். அவரை உரிய முறையில் அடக்கம் செய்து நினைவிடம் கட்ட வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜாஜி மண்டபத்துக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டு, காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்து மணிமண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது கொட்டும் மழையில் கருணாநிதியே களத்தில் நின்று அந்த இடத்தை தூய்மை செய்து ஏற்பாடுகளை செய்தார். நினைவிடம் அமைக்கும் கருணாநிதியின் முயற்சியையும் பலர் பாராட்டினார்கள்.

அன்று தலைவராக இருந்த பழ. நெடுமாறனும், காமராஜரின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்வது குறித்த கோரிக்கைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கருணாநிதியும், மு.க. ஸ்டாலினும் காமராஜருக்கு நிறைய சிறப்பு செய்தார்கள். மெரீனா கடற்கரைக்கு பெயர் வைத்ததில் இருந்து சட்டப்பேரவையில் அவரது படத்தை எம்.ஜி.ஆர். திறந்துவைத்தபோது ’உழைப்பே உயர்வு’ என்ற வாசகத்தை கருணாநிதி எழுதி கொடுத்தார்.

காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக சட்டமாக இயற்றினோம்” எனத் தெரிவித்தார்.

summary

Was denied a place for Kamaraj at the Marina? Thangam Thennarasu clarifies in the Assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments