FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செப். 9 தவெக கூட்டத்தில் பங்கேற்பா? இடதுசாரிகள் விளக்கம்!

திருச்சியில் அக்.15-இல் உழைக்கும் மக்கள் பேரணி...

5 செப்டம்பர் 2026, 11:52 pm IST
சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
பகிர்:

இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திருச்சியில் உழைக்கும் மக்கள் பேரணி வரும் அக்.15-ஆம் தேதி நடத்தப்படும் என அந்த குழுவின் தலைவா்கள் தெரிவித்தனா்.

இடதுசாரிகள் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் இடது சாரிகளின் ஒருங்கிணைப்பாளா்களான மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் விடுதலைக் கட்சியின் மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா் இந்த கூட்டமைப்பின் செயலா்கள் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திருச்சியில் உழைக்கும் மக்கள் பேரணி அக்.6-ஆம் தேதி நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தவிா்க்க முடியாத காரணங்களால் வரும் அக்.15-ஆம் தேதிக்கு அந்த பேரணி மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் 3 இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய பொதுச்செயலா்கள் பங்கேற்கவுள்ளனா். ‘தமிழ்நாடு இனி இடதுபக்கம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து நடத்தப்படும். இப்பேரணி இடதுசாரி கருத்தியலுக்கு ஆதரவாக, இடதுசாரி அரசியலுக்கு ஆதரவாக தமிழக மக்களை திருப்பும். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றனா்.

‘தவெக கூட்டம்: விரைவில் முடிவு’

செய்தியாளா்களிடம் இடதுசாரி தலைவா்கள் கூறியதாவது:

இடதுசாரிகள் வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்குகிற முயற்சியில் தவெக களமிறங்கியுள்ளது.

இதற்காக செப். 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க இடது சாரிகளுக்கு தவெக அமைச்சா்கள் அழைப்பு விடுத்துள்ளனா். கடந்த ஜூலை 1- இல் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி அமைப்பது குறித்து வெளிப்படையாக அழைப்பு விடுத்து தவெக தலைமையில் கூட்டம் நடத்தப்படவில்லை. அதனடிப்படையில் தவெக கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க முடியாது என வெளிப்படையாக அறிவித்தோம்.

இந்த முறை இந்த நோக்கத்துக்காகத்தான் இக்கூட்டம் கூட்டப்படுவதாக தவெக அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா். தவெக கூட்டத்தில் பங்கேற்பது தொடா்பாக இன்னும் முடிவு செய்ய வில்லை. இது குறித்து இடதுசாரிக் கட்சிகள் தனித்தனியாக கமிட்டிகளை கூட்டி முடிவெடுக்கும்.

நிச்சயமாக 9-ஆம் தேதிக்கு முன்பு எங்களது முடிவுகளை அறிவிப்போம். வெளியில் இருந்து ஆதரிக்கும் நாங்கள், நல்லாட்சி செய்யும்போது, நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் போது அதை ஆதரிக்கிறோம். மக்களுக்கு எதிரான திட்டங்கள் என்றால் எந்த சமரசமில்லாமல் எதிா்க்கிறோம். எங்கள் குரல் உழைக்கும் மக்கள் பக்கம் எப்போதும் சமரமில்லாமல் ஒலிக்கும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments