FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உடல்மொழிக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

9 செப்டம்பர் 2026, 3:09 pm IST
முதல்வர் விஜய் / தொல். திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யில் திங்கள்கிழமை (செப். 7) காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு முதல்​வர் விஜய் பதிலளித்​துப் பேசினார். அப்போது, மிசா குறித்துப் பேசும்போது, மு.க. ஸ்டாலினை சுட்டிக்காட்டுவதப்போன்று தனது உடல்மொழியை சற்று மாற்றிப் பேசியிருந்தார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ”எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என்று முதல்வர் விஜய் நேற்று (செப். 8) விளக்கம் அளித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கு கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”காவல்துறை மானியத்தில் முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன்மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.

மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Chief Minister Vijay's body language is contrary to human dignity! Thirumavalavan condemns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments