ராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு அதிமுக எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், ஆனால் இது போல நடவடிக்கைகள் கேலிக் கூத்தாகிறது. இது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல், குறுகிய காலத்தில் ராஜிநாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்கள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும், இதை தடுக்க இதுவரை எந்த வழிமுறைகளும் இல்லை, சில அசாதாரண சூழ்நிலைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என அறிவுறுத்திய நீதிபதிகள், ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
It is a farce for those who resigned to contest the by-election! High Court expresses displeasure!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.