மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சிபிஐ நன்றி
இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது தொடர்பாக...
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் சார்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தொகுதியிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுராந்தகம் தொகுதியிலும் போட்டியிட்டன.
Advertisement
Advertisement
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளருக்கும் வாக்களித்த மக்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
பணபலம், சாதி, மத உணர்வுகளை தேர்தல் அரசியலுக்காக முதலாளித்துவ அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. சமூக மாற்றத்திற்கான மிக நீண்ட நெடிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல் களத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
வெற்றி, தோல்வி என்பதை ஒவ்வொரு காலக் கட்டத்தின் அரசியல் பொருளாதார சமூக நிலைமைகள் தீர்மானிக்கின்றன. மக்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்னைகளின் அடிப்படையில் பெரும்பாலும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றனர். இருப்பினும் பிற்போக்கு சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை சாதி, மதம், இனம் போன்ற உணர்வுகளை முன்னிறுத்தி, திசை திருப்பி விடுகின்றன.
இந்த நிலையில், இடது சாரிகள் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் களத்தில் பரப்புரைகளை மேற்கொள்கின்றன. இந்த இடைத்தேர்தலிலும் அவ்வாறே செயல்பட்டன. மக்கள் அளித்தத் தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறது.
உழைக்கும் மக்களுக்காக அயராது போராடும், பாடுபடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட இடது சாரி கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற மனநிலைமாற்றம் ஏற்பட வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப்பெரிய குறைபாடு, விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லாததாகும். இது சிறிய கட்சிகளுக்கும், பணபலம் இல்லாத உழைக்கும் மக்களின் கட்சிகளுக்கும் எதிராக உள்ளது. மக்களின் உண்மையான விருப்பங்கள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதில்லை. அரசியல் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை.
இதன் காரணமாகவே, பதிவான வாக்குகளில் வெறும் 31 விழுக்காடு பெற்ற பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க முடிந்தது. மோடி பிரதமராக முடிந்தது. இக்குறைபாடு போக்கப்பட வேண்டும்.
இன்றைய தேர்தல் முறையில் பணபலம் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாக்குவது நமது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி விடுகிறது. எனவே, தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை உடனடியாக கொண்டு வரவேண்டும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் குறித்த இந்திரஜித் குப்தா குழு, மற்றும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
அதற்காகவும், சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், அனைத்து இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமென என அவர் வலியுறுத்தியுள்ளார்.
CPI thanks the people who voted for Left-wing candidates in the Maduranthakam and Dharapuram by-elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.