FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை குறிப்பிட்டு தவெக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியுள்ளது குறித்து...

20 செப்டம்பர் 2026, 10:31 am IST
முதல்வர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை குறிப்பிட்டு தவெக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

1. 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 படுகொலைகள் சட்டம்-ஒழுங்கு?

Advertisement

Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யயாமல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றவர்களை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்?. கொலை செய்தவர்களை கண்டறிந்து உட்சபட்ச தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்.

அதேபோல் மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ஒருவர் நடுரோட்டில் விரட்டிச் சென்று வெட்டி படு கொலை, மேலும் கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையுடன் தொடர்புடைய இடத்தில் ஏற்பட்ட தகராறில் 33 வயது இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைகளுக்கும், தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததர்க்கும் அரசு என்ன பதிலளிக்கிறது.

2. நெய்வேலி NLC க்காக விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?

நெய்வேலி NLC திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, உரிய இழப்பீடு, வீடு கட்டித் தருதல், மருத்துவ வசதி, சாலை வசதி, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஏற்கனவே நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும். முதலில் ஏற்கனவே நிலம் வழங்கிய மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; அதன் பின்னரே புதிய விளைநிலங்களை கையகப்படுத்துவது குறித்து பேசுங்கள்" என்பதே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிலைப்பாடாகும்.

3. அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் அரசின் நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசு வெறும் அறிவிப்புகளோடு நிற்காமல், களத்தில் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொசு மருந்து தெளிக்கும் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான மருந்துகள் மற்றும் பரிசோதனை வசதிகள் போதுமான அளவில் இருக்க வேண்டும். மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடையே காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு மாணவி டெங்கு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒரு மாணவன் இறந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே டெங்கு பரவலைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

4. விவசாயக் கடன் முழு தள்ளுபடி செய்ய வேண்டியதற்கு அரசின் பதில் என்ன?

திருச்சி சமயபுரத்தில் ஐந்து நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் ரூ. 247.15 கோடி பயிர்க்கடன் 50,779 விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், முழுமையான கடன் தள்ளுபடியே தங்களது கோரிக்கை என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் பதில் என்ன?.

5. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டம், விநாயகர் சிலை கடலில் கரைப்பு தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டி?

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் தொடர்பான அறிவிப்பு குறித்து மீனவர்கள் மத்தியில் அச்சமும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அரசு உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

இதனிடையே, ஞாயிற்றுக் கிழமை (20.09.2026) விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்கள் மற்றும் கரைப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தமிழக அரசு, விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெளிவான வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். ஊர்வலப் பாதைகளில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் அரசு முன்கூட்டியே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமா?.

6. கர்நாடக அரசு காவிரி தண்ணீரை முற்றிலும் நிறுத்தியது?

ஏற்கனவே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையிலும், மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டும் கடைமடைப் பகுதிகளுக்கும் சென்றடையாததாலும், காவிரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கர்நாடக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடையே பெரும் குழப்பத்தைதையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக அரசை உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மீண்டும் காவிரியில் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி வலியுறுத்துவாரா?.

7. அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் திணறல்?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பாதிப்பால் ஒரு புறம், டெங்குவாள் பொதுமக்கள் பாதிப்பு ஒரு புறம், கொசு கடியால் மக்கள் அவதி ஒரு புறம், இந்த நிலையில் இன்றைய தமிழ்நாடு, மக்கள் கதி என்ன?.

8. அரசு நேரடி நெல் கொள்முதல் செய்வது எப்போது?

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விருத்தாசலம் சின்னப்பரூர், மற்றும் பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததானால் மழையில் நனைந்து வீணாவதை அரசு எப்போது தடுக்கப் போகிறது?.

இதுபோன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு அரசு மைவுணம் காக்காமல் உடனடியாக செயல்படுமா?. இல்லையெனில் செவுடன் காதில் ஊதிய சங்கு போல தான் இந்த அரசு என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

summary

DMDK General Secretary Premalatha Vijayakanth has raised various questions against the TVK government, highlighting several issues facing Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments