சங்ககிரி: தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு எதிரான லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
சங்ககிரி மேற்கு தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான காலவரையறையற்ற போராட்டத்தை திரும்பப் பெறப்பட்டது பற்றி....
சங்ககிரி மேற்கு தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிரான காலவரையறையற்ற போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டம் நடத்தப்படும் எனச் செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் சிமெண்ட் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என். கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
"சங்ககிரி மேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், கடந்த நான்கரை ஆண்டுகளாகவே இப்பகுதியில் உள்ள லாரிகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது. அவ்வப்போது அந்நிறுவனத்துடன் பேசிப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வந்தோம். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உள்ளூர் லாரிகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்காமல், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்குக் குறைந்த வாடகையில் அதிகளவிலான சரக்குகளை ஏற்றி அனுப்பி வந்தனர்.
எனவே, தனியார் சிமெண்ட் நிறுவனம் உள்ளூர் லாரிகளுக்கும் சரக்குகளைக் கொண்டு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும், அதற்கான வாடகையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; இல்லையென்றால் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டம் நடைபெறும் எனச் செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவித்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து, தனியார் சிமெண்ட் நிறுவன அதிகாரிகளுடன் செப்டம்பர் 17, 19 ஆகிய இரு தினங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சங்ககிரி மேற்கு ஆலையில் உற்பத்தியாகும் சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களை அந்நிறுவனத்தின் கிளைகளுக்கு எடுத்துச் செல்ல எங்களது லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இரு தரப்பினரிடையேயும் சுமுகமான முடிவு எட்டப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்" என்றார்.
பேட்டியின் போது சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கே. முருகேசன், பொருளாளர் எஸ்.ஆர். செங்கோட்டுவேல், துணைத் தலைவர் எஸ். வெங்கடாசலம், இணைச் செயலாளர் ஆர். வெங்கடாசலம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Lorry owners have announced the withdrawal of their indefinite strike against the private cement manufacturing company in Sankari West.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.