பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கீழடி அகழாய்வு அறிக்கை வெளிவராது: சு. வெங்கடேசன் எம்பி
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாட்டார்கள் என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
கீழடி தொல்லியல் அகழாய்வு முடிவுகள் மற்றும் அறிக்கைகளுக்கு முறையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சான்றுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு அது குறித்து கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேசியிருந்தார். மேலும், கீழடி விவகாரத்தை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கீழடி அகழாய்வில் அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கைக்கு எதிராக அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
அவரது கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று பேசியுள்ளார். அதில், "மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணலில், கீழடி அகழாய்வு அறிக்கை முந்தைய தமிழ்நாடு அரசின் அரசியல் தாக்கம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக எழுதப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இது ஒரு தீவிரமான குற்றச்சாட்டு. இதற்கான ஆதாரத்தை அமைச்சர் வெளியிட வேண்டும். அவரது கூற்று உண்மையென்றால் சில அடிப்படைக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டபோது தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் அதே ஆட்சிதான் இருந்தது. அப்படியானால், அவர் மேற்கொண்ட அகழாய்வுக்கும் அன்றைய அரசுக்கும் அரசியல் தொடர்பு இருந்ததா?
அதன்பிறகு, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களே அகழாய்வு அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கும் அரசியல் பின்னணி இருப்பதாக ஒன்றிய அரசு கூறுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது அறிக்கையைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. முதலில் காலதாமதம் செய்தனர். நீதிமன்றத்தில் ஒன்பது மாதங்களுக்குள் வெளியிடுவோம் என்றனர். அந்தக் காலக்கெடுவும் முடிந்தது. பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவில் “ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்” என்றனர். அதன் பிறகு நிபுணர் குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
நிபுணர் குழு எழுப்பிய கேள்விகளுக்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பதிலளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது அறிக்கையை வெளியிடுவதுதான் ஒன்றிய அரசின் கடமை. அறிக்கை சரியானது என்றால் வெளியிட வேண்டும். தவறு என்றால், எந்தப் பகுதியில் தவறு, எந்த அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் தவறு என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதைச் செய்யாமல் அரசியல் குற்றச்சாட்டை முன்வைப்பது அறிவியல் ரீதியான பதில் அல்ல.
கீழடி ஆய்வு மண்ணடுக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. காலக்கணிப்பு, மண்ணடுக்கியல், உலோகவியல், தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளை உள்ளடக்கியது.
இந்த முடிவுகள் தவறானவை என்றால், எந்த ஆய்வு நிறுவனம் அதை மறுக்கிறது, எந்தத் தரவு தவறானது என்பதைக் காட்ட வேண்டும்.
கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள், கங்கைச் சமவெளி நகர நாகரிகத்திற்கு முன்னரே தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், செழிப்பான நகரமயமான பண்பாடு இருந்ததற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. இதுதான் கீழடியின் வரலாற்று முக்கியத்துவம். இந்த முடிவை ஏற்க முடியவில்லை என்றால் அறிவியல் ரீதியாக மறுக்க வேண்டும்; அரசியல் குற்றச்சாட்டின் மூலம் அல்ல. மேலும், இது தமிழ்நாட்டுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. இந்தியத் தொல்லியல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது தொடர்பான பிரச்சினை.
வேதகால நாகரிகம் தான் இந்தியாவின் தொன்மையான நாகரிகம். இந்தியாவின் அனைத்து அறிவு மூலமும் வேதத்திலிருந்தே துவங்குகிறது என்ற பாஜகவின் இந்துத்துவா கோட்பாட்டின் அடிப்படையயே மறுக்கும் உண்மையை கொண்டது கீழடி.
கங்கைசமவெளி நாகரிகத்திற்கு முந்தைய காலத்தை கீழடி அகழாய்வுகள் மெய்பிப்பதால் அவர்களால் இந்த ஆய்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தொடர்ந்து பல்வேறு காரணங்களைச் சொல்லி அறிக்கையை வெளியிடாமல் மறுத்து வருகிறார்கள்.
இப்பொழுது மிக மோசமான குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களின் அரசியல் குற்றச்சாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கீழடி அறிக்கையில் தவறு இருந்தால் அறிவியல் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், மூன்று ஆண்டுகளாக வெளியிடாமல் வைக்கப்பட்டுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
அறிக்கையைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் கீழடியின் வரலாற்று உண்மையை மறைக்க முடியாது. பாஜக ஆட்சியில் இருக்கும் வரை கீழடி அறிக்கையை வெளியிட மாட்டார்கள். அதை ஏற்றுக்கொண்டால் சித்தாந்த அடித்தளேமே ஆட்டம் காணும் என்பதால் வெளியிட மறுக்கிறார்கள். அமர்நாத் ராமகிருஷ்ணனின் போராட்டம் தொல்லியல் அறிஞர்களின் மரபு சார்ந்த ஒரு போராட்டம். அகழாய்வில் அரசியல் செய்வது பாஜகவும், மோடியும் தான்" என்று பேசியுள்ளார்.
Keezhadi excavation report will not be released as long as BJP is in power: Su. Venkatesan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.