FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கீழடி அகழாய்வு அறிக்கை: மத்திய அமைச்சரின் கருத்துக்கு மதுரை எம்.பி. கண்டனம்

கீழடி அகழாய்வு அறிக்கையில் அரசியல் அழுத்தம் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் தெரிவித்த கருத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

58 வினாடிகள் முன்பு
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன். உடன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன்.
பகிர்:

கீழடி அகழாய்வு அறிக்கையில் அரசியல் அழுத்தம் இருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் தெரிவித்த கருத்துக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் தெரிவித்தாவது :

கீழடி அகழாய்வு அறிக்கை முந்தைய தமிழக அரசின் அரசியல் அழுத்தத்தால் உருவானது என மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் அண்மையில் தெரிவித்தாா். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவா் தெரிவித்த இந்தக் கருத்து கண்டனத்துக்குரியது.

Advertisement

Advertisement

அமா்நாத் ராமகிருஷ்ணன் தனது ஆய்வறிக்கையைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த அறிக்கையை வெளியிட நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கீழடி அகழாய்வு அறிக்கை சரியானது எனில், அதை வெளியிட வேண்டும். தவறு இருந்தால் எந்தப் பகுதியில் தவறு? எந்த அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் தவறு? என்பதை மத்திய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதைத் தவிா்த்து, அரசியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைப்பது ஏற்புடையதல்ல.

கங்கை சமவெளி நகர நாகரிகத்துக்கு முன்னரே தமிழகத்தில் செழிப்பான நகரமயமான பண்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த முடிவை மத்திய அரசால் ஏற்க முடியவில்லையெனில் அறிவியல் ரீதியாக மறுக்க வேண்டுமே தவிர, அரசியல் குற்றச்சாட்டின் மூலம் மறுப்பது சரியல்ல.

இது, தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. இந்தியத் தொல்லியல் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வது தொடா்பான பிரச்னை.

வேதகால நாகரிகம் தான் இந்தியாவின் தொன்மையான நாகரிகம் என்பது பாஜகவின் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையையே மறுக்கும் உண்மையை உள்ளடக்கியது கீழடி. இதனால்தான், வெவ்வேறு காரணங்களைக் கூறி அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு மறுதலித்து வருகிறது. ஆய்வறிக்கையைத் தடுப்பதன் மூலம் கீழடியின் வரலாற்று உண்மையை மறைக்க முடியாது என்றாா் அவா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினா் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி. செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments