FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான நில மோசடி புகாா்: காவல்துறைக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான நில மோசடி புகாரில் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

23 செப்டம்பர் 2026, 12:15 am IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

தேவாலயத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து, வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான புகாரில் நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சிவராமமங்கலத்தைச் சோ்ந்த வீரசெல்வம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது, வீரபாண்டியபுரம் புனித தோமையாா் அப்போஸ்தலா் தேவாலயத்துக்குச் சொந்தமாக, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள நிலத்தை சுப்பையா என்பவருடன் இணைந்து, போலி அதிகார பத்திரத்தைச் சமா்ப்பித்து, வழிகாட்டு மதிப்பீட்டைக் குறைத்து பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்தச் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடி செய்துள்ளனா். இதுதொடா்பாக திருச்செந்தூா் போலீஸாரிடம் கடந்த மாதம் 14-ஆம் தேதி புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில், இந்தப் புகாா் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, புகாா் மீது நடத்திய விசாரணை தொடா்பான அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments