தாராபுரம் இடைத்தேர்தல்: பழைய கணக்கு, புதிய போட்டி...
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி...
இதுவரை இடைத்தேர்தலை சந்திக்காத திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெறும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில், இந்தத் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், பாமக ஒரு முறையும் வென்றுள்ளன. 1952-இல் சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 1984-இல் அதிமுக தொடர்ச்சியாக மூன்றாவது முறை வென்ற பிறகு, இந்தத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் 88.84 சதவீத வாக்குகள் பதிவாகின. நான்குமுனைப் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் பதிவான 1,99,944 வாக்குகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொ.சத்தியபாமா 81,100 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் ப.இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்தைப் பிடித்திருந்தார்.
Advertisement
Advertisement
முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த தவெக வேட்பாளர் எஸ்.கெளரி சித்ரா 46,438 வாக்குகளைப் பெற்று, 23.23 சதவீத வாக்குகளுடன் 3-ஆம் இடம் பிடித்தார். நாதக வேட்பாளர் பி.திவ்யா 6,026 வாக்குகளுடன் 4-ஆம் இடம் பெற்றார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்ததால், தற்போது தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக இருந்த சத்தியபாமா, தற்போது தவெக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பா.லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் போட்டி: தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. நகர்ப்புற தொழிலாளர்கள், விவசாயிகளின் வாக்குகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிக்கும் என்பதோடு, கடந்த தேர்தலில் உடனிருந்த காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தற்போது தவெகவின் பக்கம் சென்றுவிட்டதும் திமுக பெறும் வாக்குகளில் சரிவை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், ஆளும்கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தாலும் தவெக அரசின் குறைபாடுகளைப் பிரசாரத்தில் சுட்டிக்காட்டுவோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவதும், அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதும் ஆளுங்கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
வெற்றி பெற்ற ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே பதவி விலகி, சத்தியபாமா ஆளுங்கட்சியில் ஐக்கியமானது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது சில இடங்களில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படுவது இந்த அதிருப்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. ஆனால், இது வாக்குப் பதிவில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தற்போதே கணிப்பது கடினம்.
கொங்கு மண்டலத்தின் தொழில் மையமாகத் திகழும் திருப்பூர் மாவட்டம் கடந்த 2021 தேர்தல் வரை அதிமுகவின் கோட்டையாகவே விளங்கியது எனலாம். கடந்த 2021-இல் அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், தாராபுரம், காங்கயம், திருப்பூர் தெற்குத் தொகுதிகளில் திமுகவும் வென்றிருந்தன. எனினும், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தின் 8 தொகுதிகளில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளை தவெக கைப்பற்றி திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்குப் பின்னர் அக்கட்சியினரின் தேர்தல் பணி சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. திமுக தரப்பில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் என்றாலே பொதுவாக ஆளுங்கட்சிக்கு சாதகமானதாகவே அமையும் என்ற கருத்து உள்ளது. ஆளும்கட்சியான தவெக-வுக்கு சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முதல்வர் விஜய் இந்தத் தொகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. ஐந்து முனைப் போட்டி யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பது அக். 9- ஆம் தேதி தெரிந்துவிடும்.
கடந்த 2026 தேர்தல் வாக்குகள் நிலவரம்
பொ.சத்தியபாமா - அதிமுக 81,100
ப.இந்திராணி - திமுக 64,373
எஸ்.கெளரி சித்ரா - தவெக 46,438
பி.திவ்யா - நாதக 6,026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.