போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?
போரூர் - வடபழனி மெட்ரோ சேவை தொடங்கப்படாமல் யாருக்காகக் காத்திருக்கிறது என்பது பற்றி..
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் அமைந்துள்ள போரூா் - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி கிடைத்தும் ஏழு மாதங்களுக்கு மேலாக சேவை துவக்கப்படாமல் காத்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைக்கும் விழாவுக்கு தேதி கேட்டு மெட்ரோ ரயில் சேவை காத்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முதலாவதாக 14.64 கிலோ மீட்டர் தொலைவுக்கு போரூா்- வடபழனி வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டுவிட்டது.
Advertisement
Advertisement
பணிகள் நிறைவடைந்து அனுமதியும் கிடைத்த பிறகும், சுமார் ஏழு மாதங்களாக சேவை தொடங்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருப்பது, அப்பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
செப்டம்பர் இறுதிக்குள், இந்த வழித்தடத்தில் சேவை தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்று வரை அது குறித்த அடுத்தக்கட்ட தகவல் எதுவும் வெளிவராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
அதாவது, பிற நகரங்களில் பிரதமர் மோடி தலைமையில் ரயில் சேவைகள் தொடக்கும் விழாவின்போதுதான் இது தொடங்கப்படுமா? அல்லது, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் நடைபெறும் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது இந்த சேவை தொடங்கப்படுவதற்காக காத்திருக்கிறதா என்பதே அந்த கேள்விகள்.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 128 நிலையங்கள் அமைகின்றன. இதில் சுமாா் 43 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 75 கி.மீ. உயா்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இதில், முதல் பணியாக, வடபழனி முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான 14.6 கி.மீ. மஞ்சள் வழித்தடம் 14 நிலையங்களுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பாதையில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கடந்த பிப்ரவரியிலேயே அனுமதியும் வழங்கிவிட்டது.
அடுத்து, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறநகா் நெடுஞ்சாலை வரையிலான 26 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Porur–Vadapalani Metro Rail Service! Who is it waiting for?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.