FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்: ஆந்திர இணைப் பொறுப்பாளர் வானதி சீனிவாசன்

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதன்கிழமை நியமித்துள்ளார்.

24 செப்டம்பர் 2026, 3:59 am IST
பகிர்:

28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் புதன்கிழமை நியமித்துள்ளார்.

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ், ஆந்திர மாநில இணைப் பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாஜக தேசிய தலைமையக பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தருண் சுக் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறியுள்ளார். புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:

Advertisement

Advertisement

பாஜக தேசிய துணைத் தலைவரான ராம் மாதவ் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா, சுனில் பன்ஸல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரிக்கு கே. சுரேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர பாஜக பொறுப்பாளராக அரவிந்த் பதோரியாவும், இணைப் பொறுப்பாளராக வானதி சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற மாநிலங்கள்: பாஜக தேசிய பொதுச் செயலராக கடந்த மாதம் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஹரியாணா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலப் பொறுப்பாளராக வினோத் தாவ்டேவும், இணைப் பொறுப்பாளர்களாக ஜெகதீஷ் படேல், மேதா குல்கர்னி, பிரதீப் வர்மா, ஆனந்த் ஓஜா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வைஜயந்த் ஜெய் பாண்டா மகாராஷ்டிர மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு அமித் மாளவியா, சதானந்த் ஷெட் தனவாடே மற்றும் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி பாஜக பொறுப்பாளராக மூத்த தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்யாங் செரிங் நம்கியால் மற்றும் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.

ஊடகப் பிரிவு: இந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக, கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவுகளை உள்ளடக்கிய தகவல் தொடர்புத் துறையின் ஒருங்கிணைப்பாளராக அனில் பலூனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அனில் பலுனி வகித்து வந்த தேசிய ஊடகப் பிரிவின் அமைப்பாளர் பதவிக்கு, சமீபத்தில் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஆஷிஷ் உஷா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவாலான மாநில அனுபவம் தமிழகத்தில் கைகொடுக்குமா?

ஜம்மு- காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சவாலான மற்றும் கடினமான அரசியல் களங்களில் பாஜகவின் தேர்தல் வியூகங்களை வகுத்து, அங்கு கட்சியை வலுப்படுத்தியதில் ராம் மாதவ் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் மற்றும் பாஜக மேலிடத்துடன் அவருக்குள்ள நேரடித் தொடர்பு ஆகியவை ஜம்மு -காஷ்மீரில் பாஜக சீரமைப்புக்கு பெரிதும் உதவியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தைத் தொடர்ந்து எதிர்வரும் இரண்டு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நிலவக்கூடிய பலமுனைப் போட்டி மற்றும் வாக்குச் சிதறல் போன்ற சூழல்களை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப துல்லியமான வியூகங்களை வகுக்கவும் ராம் மாதவின் அரசியல் அனுபவம் பெரிதும் உதவும் என்று பாஜக மேலிடத் தலைவர்கள் நம்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments