FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெற்று தருவதும் ஆணையத்தின் வேலை: பி. ஆர். பாண்டியன்

தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிப்பதற்கான நடவடிக்கையை காவிரி ஆணையமே மேற்கொள்ள வேண்டும் பி. ஆர் பாண்டியன் பி. ஆர் பாண்டியன் பேசியிருப்பது குறித்து...

41 வினாடிகள் முன்பு
பகிர்:

சிதம்பரம்: உத்தரவு போடுவது மட்டும் ஆணையத்தின் வேலை அல்ல. தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெற்று தருவதும் ஆணையத்தின் வேலைதான். கர்நாடகம் மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உதவியைக் கோரி அணையைத் திறக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்திடக் கோரியும், ராசி மணல் அணைக்கட்ட திட்டமிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுக்க வலியுறுத்தி பி.ஆர். பாண்டியன் தலைமையிலான தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பிரசார பயணம் சிதம்பரம் நகருக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது.

இந்த பிரசார பயணம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் தொடங்கி காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் சென்னை புதுச்சேரி கடலூர் வழியாக பிரசார பயணம் மேற்கொண்டு வியாழக்கிழமை மாலை திருவாரூரில் நிறைவு பெறுகிறது.

Advertisement

Advertisement

பின்னர், சிதம்பரம் காந்தி சிலை அருகே பிரசார பயண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி. ஆர். பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.

கடலூர் மாவட்டச் செயலாளர் மணிக்கொல்லை ராமச்சந்திரன், கடலூர் மாவட்ட தலைவர் அன்பழகன், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் பிச்சாவரம் கண்ணன், நிர்வாகிகள் ஹாஜா மொய்தீன், குமராட்சி தாராசிங், பெருமாள், சேகர், முத்துராமன், நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர். பாண்டியன், செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

கடந்த 20 ஆம் தேதி காவிரி சங்கமிக்கிற பூம்புகாரில் இருந்து இந்த பிரசார பயணத்தை தொடங்கினோம். 5 ஆவது நாளாக சிதம்பரத்தில் நடக்கிறது. வியாழக்கிழமை மாலை திருவாரூரில் நிறைவடைய இருக்கிறது. புதன்கிழமை காலை சென்னையில் 18 கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆதரவளித்து கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதில் திமுகவும், அதிமுகவும் பங்கேற்க வராதது வருத்தம் அளிக்கிறது.

ஆனால், திமுக தனது ஆட்சிக் காலத்தில் ராசி மணலில் அணை கட்டுவதற்கான ஒப்புதல் கடிதத்தை தந்திருக்கிறார்கள். எனவே திமுக பங்கேற்காவிட்டாலும் அவர்கள் அளித்த அதிகாரப்பூர்வ கடிதம் பற்றி அந்த கூட்டத்தில் பேசப்பட்டது. பங்கு பெற்ற அனைவருமே ராசி மணல் அணைதான் மேகேதாட்டுக்கு மாற்று என்று தெரிவித்து கையெழுத்து போட்டிருக்கிறார்கள். புதன்கிழமை இரவு புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்தோம். அவரிடம் ராசி மணல் அணைக்கான ஆதரவு கோரினோம். ராசி மணல் என்ற திட்டத்தை இதுவரை யாரும் எனது கவனத்திற்கு எடுத்து வரவில்லை என கூறினார். இதைப் பார்த்துவிட்டு நான் விரைவில் கையெழுத்து போடுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இந்த கையொப்பங்களை எல்லாம் பெற்றுக் கொண்டு விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து, உடனடியாக ராசி மணலில் அணை கட்டுவதற்கான திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்த இருக்கிறோம். இந்த பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் புதிதாக ஆட்சிக்கு வந்திருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலைப் பெற்றுதான் அவர்களிடத்திலே முன்மொழிய முடியும். அந்த அடிப்படையில்தான் இந்த பிரசார பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம்.

உத்தரவு போடுவது மட்டும் ஆணையத்தின் வேலை அல்ல

கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் விடுவிக்க ஆணையம் உத்தரவிட்டது. அதை கர்நாடகம் ஏற்க மறுத்து ஒரு வார காலமாக அணையை மூடிவிட்டது. இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படையில் தண்ணீரை தமிழகத்திற்கு விடுவிப்பதற்கான நடவடிக்கையை ஆணையமே மேற்கொள்ள வேண்டும். உத்தரவு போடுவது மட்டும் ஆணையத்தின் வேலை அல்ல. தமிழ்நாட்டிற்கு தண்ணீரை பெற்று தருவதும் ஆணையத்தின் வேலைதான். கர்நாடகம் மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உதவியை கோரி அணையைத் திறக்க வேண்டும். ராணுவத்தை பயன்படுத்திக்கூட அணையை திறப்பதற்கான அனுமதியை காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கி இருக்கிறது. அதை தமிழக அரசு ஆணையத்தில் எடுத்துரைக்க வேண்டும்.

அநாகரிகமானது

உச்ச நீதிமன்றம் போய்தான் தீர்ப்பாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அநாகரிகமானது. உச்ச நீதிமன்றத்தின் பணிகளையே இந்த காவிரி நீருக்காக தொடர்ந்து நாம் முடக்க நினைப்பது ஆணையத்தின் தவறே தவிர, தமிழ்நாடு விவசாயிகளின் தவறல்ல. தமிழக அரசின் தவறல்ல. ஆணையம்தான் அதற்கான அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Securing water for Tamil Nadu is also the Commission's job: P.R. Pandian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments