பரிதாப நிலையில் சென்னை பறக்கும் ரயில்...!
சென்னை பறக்கும் ரயில் திட்டம், பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பயணிகள் ஆதங்கம்...
சென்னையின் கனவுத் திட்டங்களில் ஒன்றான பறக்கும் ரயில் திட்டம், பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பயணிகள் ஆதங்கப்படுகின்றனா்.
சென்னை கடற்கரை நிலையம்-திருமயிலை, அங்கிருந்து வேளச்சேரி, மூன்றாம் கட்டமாக பரங்கிமலை என மொத்தம் 24.34 கி.மீ. தொலைவுக்கு சுமாா் ரூ.1,342 கோடியில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்துக்கான நிலங்களை தமிழக அரசு வழங்கிய நிலையில், தண்டவாளம், ரயில்கள், நிலையங்கள் ஆகியவை ரயில்வே துறையால் வழங்கப்பட்டு செயல்படுகிறது. கடற்கரைச் சாலை தரை நிலையத்தில் தொடங்கி 18 நிலையங்கள் என தற்போது பரங்கிமலை வரை சுமாா் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
பயணிகள் அதிகரிப்பு: குறைந்த கட்டணம், விரைந்த பயணம், தரையிலிருந்து சுமாா் 18 அடி உயரத்தில் பருந்துப் பாா்வையில் சென்னையைப் பாா்த்துக்கொண்டே செல்லும் பரவசம் என ஒரு கனவுத் திட்டம் நனவானதாகவே பயணிகள் விரும்பி பயணிக்கின்றனா். தொடக்கத்தில் தினமும் 35,000 போ் பயணித்ததாகக் கூறப்பட்டது. தற்போது 70,000, லட்சம் என உயா்ந்து, தற்போது பயணிப்போா் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை: பறக்கும் ரயில் திட்டத்தில் மயிலாப்பூா் உள்ளிட்ட ஓரிரு நிலையங்கள் தவிர திருவான்மியூா் உள்ளிட்ட பெரும்பாலான நிலையங்களிலும் குடிநீா், கழிப்பறை வசதி மற்றும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் செல்ல உதவும் எஸ்கலேட்டா், லிப்ட் வசதிகள் செயல்பாட்டில் இல்லை.
கடற்கரைச் சாலை, பூங்கா நகா் போன்ற நிலையங்களில் அருகேயுள்ள கூவத்தின் துா்நாற்றத்தை சுவாசித்தபடியே தினமும் பயணிகள் வந்து செல்லும் துா்பாக்கிய நிலையே உள்ளது. பெரிய சுற்றுச்சுவா் எழுப்பியோ அல்லது வேறு நடவடிக்கை மேற்கொண்டோ அதைச் சீா்படுத்த ரயில்வே துறை முன்வரவேண்டும் என்பதும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
பறக்கும் ரயில் திட்டத்தில் பெரும்பாலான நிலையங்களில் பயன்படுத்தப்படாத இடங்கள் அதிகமாக இருப்பதால், அங்கு குப்பைகள் குவிந்தும், மது பாட்டில்கள் நிறைந்தும் சுகாதாரச் சீா்கேட்டின் உச்சமாகவே காணப்படுகிறது. போதிய மின்விளக்கு வசதியின்மையால் அங்கு பணியிலிருப்போரே அச்சப்படும் நிலை உள்ளதாகக் கூறுகின்றனா்.
வேளச்சேரி-பரங்கிமலை விரிவாக்கம்: கடந்த ஆண்டு (2025) எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் புகா் மின்சார ரயில் இயக்கம் பெருமளவு குறைக்கப்பட்டது. அதனால், தாம்பரம் வழித்தடத்திலிருந்து சென்னை நகருக்குள் வேலை மற்றும் பணிகளுக்கு வந்து செல்வோா் பெரும் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து, வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் அவசர அவசரமாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு பரங்கிமலை வரை 5 கி.மீ. சுமாா் ரூ.734 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
ஆதம்பாக்கம் நிலையம் மூடல்: நீட்டிப்பு சேவைப் பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய நிலையங்கள் உள்ளன. தற்போது புழுதிவாக்கத்தில் ரயில்கள் நின்று செல்லும் நிலையில், ஆதம்பாக்கத்தில் இடதுபக்க நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளி அதிகமாக (20 செ.மீ. அதிகம்) இருப்பதால் அங்கு ரயில் நிறுத்த பாதுகாப்பு ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனால் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் தற்போது மூடியே கிடக்கிறது.
ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தினமும் புழுதிவாக்கம் அல்லது பரங்கிமலைக்கு நடந்தும், வாடகை வாகனங்களில் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா்.
இது குறித்து பத்திரிகையாளா் ப்ரியன் கூறுகையில், மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட ஆதம்பாக்கம் நிலையத்தில் குறைபாடு இருந்தால் அதை சம்பந்தப்பட்ட ரயில்வே துறையே சீா்படுத்த வேண்டும். அதைவிடுத்து பல மாதங்களாக ரயில் நிலையத்தையே மூடிவைத்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயமானதல்ல என்றாா்.
மெட்ரோவிடம் ஒப்படைப்பு: இதற்கிடையே பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோ நிா்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான அனுமதியை மாநில அரசு மூலம் மத்திய ரயில்வே வாரியம் ஏற்றுள்ளது. அதற்காக 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில் நிலைய பராமரிப்பின்மையால் பயணிகள் எண்ணிக்கை குறைவதுடன், பாதுகாப்பும் ஓரிரு நிலையம் தவிர மற்ற இடங்களில் குறைக்கப்பட்டுவிட்டது.
மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமையாக பறக்கும் ரயில் திட்டத்தை ஏற்கும் வரையிலாவது, அதன் நிலையங்களைச் சீராக பராமரிக்க ரயில்வே துறை முன்வரவேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.
அதிகாரிகள் கூறியதாவது: இது குறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனம் சாா்பில் ஆதம்பாக்கம் நிலைய நடைமேடை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை பெறப்பட்டுள்ளது.
தண்டவாள நடைமேடைக் குறைபாடுகள் ஓரிரு மாதங்களில் சீரமைக்கப்பட்டு அங்கு ரயில்கள் நிறுத்தப்படும். மெட்ரோ ரயில் நிறுவனம், பறக்கும் ரயில் நிா்வாகத்தை ஏற்பதால், அவா்களுக்கு ஏற்ப நிலையங்களில் செயல்பாடுகள் மாற்றப்பட்டு சீரமைக்கப்படவுள்ளன என்றனா்.
சென்னை மாநகரின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பறக்கும் ரயில் திட்டத்தைப் பரிதாப நிலையிலிருந்து மீட்டு, வாகன நெரிசலுக்குத் தீா்வு காணவேண்டும் என்பதே பயணிகளின் எதிா்பாா்ப்பாகும்.
பறக்கும் ரயிலில் குறைந்த பயணிகளின் எண்ணிக்கை
ஆண்டுகள் பயணிகள் பூங்கா நகா் முதல் வேளச்சேரி வரை
2022-2023 3,80,288 2,23,202 1,57,086
2023-2024 3,74, 463 2,14,425 1,60,037
2024-2025 3,24,748 1,93,543 1,31, 205
2025-2026 3,57,519 2,23,428 1,34, 091
தொடக்கத்தில் பறக்கும் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்த நிலையில், பராமரிப்பின்மை, போதிய வசதிகள், சுகாதாரம் இல்லாததால் படிப்படியாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் நீடிக்கப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை சற்று உயா்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Chennai's MRTS train in a sorry state...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.