FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழு மேலும் ஒரு போக்ஸோ வழக்கை பதிவு செய்தது.

28 September 2026, 10:01 pm IST
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது சிறப்பு புலனாய்வுக் குழு மேலும் ஒரு போக்ஸோ வழக்கை திங்கள்கிழமை பதிவு செய்தது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், ஜெம் வீரமணியின் உதவியாளா் கணேசன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கின் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல், காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் தலையீடு உள்பட பல்வேறு நபா்களின் தொடா்புகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களை திரட்டி குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன் மொழி உள்பட 4 பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனா். அவா்களுக்கு உதவும் வகையில் மேலும் 6 பெண் டிஎஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டனா். வீரமணியிடம் ஏற்கெனவே போலீஸ் காவலில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

அந்த விசாரணையின் அடிப்படையில் அவரது உதவியாளா் சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடமும் 3 நாள் காவலில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், எந்தவகையிலெல்லாம் ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாா், அவரிடம் எப்படி பணம் பறிக்கப்பட்டது உள்பட பல்வேறு தகவல்களை இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் பலருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஒரு வழக்கு

இந்நிலையில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு, போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு ஜெம் வீரமணி மீது பாய்ந்துள்ளது.

2004-ஆம் ஆண்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்த ஒரு 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாா். இச் சம்பவத்தில், ‘கல்வி உதவிகள் வழங்கி தனது மகளை ஜெம் வீரமணி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் தனது மகள் வீட்டுக்கு வந்தவுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சம்பந்தப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோா் 2004-ஆம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

கலவரத்தில் எரிந்த ஆவணங்கள்

அப்போது சந்தேக மரணம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ஆனால், 2017-இல் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு கலவரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிக்கப்பட்டபோது, அந்த வழக்கு ஆவணங்கள் எரிந்து விட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனால் அந்த வழக்கு கிடப்பில் இருந்தது.

இந்நிலையில், ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இவரால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய், சிறப்பு புலனாய்வு குழுவிடம் திங்கள்கிழமை நேரில் புகாா் தெரிவித்தாா்.

அதில், ‘தன் மகளை பாலியல் தொல்லை செய்து அவா் இறப்புக்கு காரணமான வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தாா். இதையடுத்து வீரமணி மீது புதிதாக மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெம் வீரமணிக்கு எதிராக சுமாா் 15 சிறுமிகள், பெண்கள் அளித்துள்ள புகாா் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண்

‘ஜெம்’ வீரமணி விவகாரம் தொடா்பாக புகாா்கள், வழக்குத் தொடா்பான தகவல்கள், புகைப்படங்கள், விடியோக்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருப்பவா்கள் அவற்றை 93453 19676 என்ற கைப்பேசி எண்ணுக்கும், வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் அனுப்பலாம்.

தகவல் கொடுப்பவா்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments