FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

‘ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 October 2026, 12:38 am IST
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ‘ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், வீரமணியின் உதவியாளா் கணேசனும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதற்கிடையே வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு சிறுமி, 2004-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு புதிதாக ஒரு வழக்கை கடந்த திங்கள்கிழமை பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியது தொடா்பாக புதிதாக ஒரு பிரிவு சோ்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் ஒரு வழக்கு: இந்த நிலையில், வீரமணி மீது மேலும் ஒரு சிறுமியின் தாய், சிறப்பு புலனாய்வுக் குழுவில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், தனது மகளை படிக்க வைக்க உதவி செய்த வீரமணி, ஒரு நாள் காரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தாா். இதன் அடிப்படையில் வீரமணி மீது புதிதாக ஒரு போக்ஸோ வழக்கை புதன்கிழமை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் பதிவு செய்தனா். வீரமணி மீது இதுவரை 3 வழக்குகள் பதியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு புலனாய்வுக் குழுவிலிருந்து துணை ஆணையா் விடுவிப்பு

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த சென்னை காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் கீதாஞ்சலி, சிறப்பு புலனாய்வுக் குழுவிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் பிறப்பித்தாா். கீதாஞ்சலிக்கு மாற்றாக சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையா் கீதா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் சிறப்பு புலனாய்வுக் குழுவினருடன் தற்போது இணைந்து பணியை தொடங்கியுள்ளாா்.

இதற்கிடையே, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி மற்றும் சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments