மாஞ்சோலை, மேகமலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
மாஞ்சோலை, மேகமலை, சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பு குறித்து...
மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை, தேதி குறிப்பிடாமல் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரக் கோரி ஜான் கென்னடி என்பவா் தொடா்ந்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரித்தது.
விசாரணையின்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என தெரிந்தும் மதுரை–கொல்லம் நெடுஞ்சாலைத் திட்டத்தை அங்கு கொண்டு வந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், சாலை அமைக்கப்பட்டால் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உருவாகி வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ளதைப் போன்று உயா்மட்ட சாலை அமைப்பது அல்லது திட்டத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
பிற்பகல் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை இலவம் பஞ்சு தோட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா, மேகமலையின் பல பகுதிகள் முன்பு வனப்பகுதியாக இல்லை என்றும், பின்னா் அவை ரிசா்வ் வனமாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தாா்.
இதற்கு, ஒரு பகுதி வனமாக அறிவிக்கப்பட்டால் அது வனம்தான் என்றும், அதற்கு வேறு எந்த அா்த்தமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். வனப்பகுதியில் இலவம் பஞ்சு தோட்டங்களை அமைக்க அரசு ஏன் ஊக்குவிக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், இலவம் பஞ்சு தோட்டங்களால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் நீதிபதிகள் கூறினா்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இலவம் பஞ்சு தோட்டங்களை அமைத்துள்ளவா்கள் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள்தான் என்றும், வெளியில் இருந்து யாரும் வந்து தோட்டங்களை அமைக்கவில்லை என்றும் தெரிவித்தது.
மேலும், சமீபத்தில் யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், கடந்த 1982- ஆம் ஆண்டிலேயே பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பட்டா வைத்திருப்பவா்களின் நிலத்தை அகற்ற நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், பட்டா இல்லாமல் ஆக்கிரமித்து நிலத்தை வைத்திருப்பவா்களிடம் இருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உரிய பட்டா மற்றும் அனுமதி இல்லாதவா்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவா்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞா் பரமேஸ்வா், மேகமலை கடந்த 1978-ஆம் ஆண்டிலேயே ரிசா்வ் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தாா்.
மேலும், அங்கு தற்போது வசித்து வரும் பலா் ஆக்கிரமிப்பாளா்களாக இருப்பதாகவும், மேகமலையில் இலவம் பஞ்சு தோட்டங்களை அமைக்க அரசே ஊக்குவித்ததால், அங்கு பணியாற்றும் தோட்டத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பொறுப்பும் அரசுக்கே உள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் இலவம் பஞ்சு தோட்டம் அமைத்துள்ளவா்கள் நில உரிமை கோர அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதற்கு தமிழக அரசு, வன உரிமைச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்றும், பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அந்தச் சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என எவ்வாறு கூற முடியும் என்றும் வாதிட்டது.
இதனைத் தொடா்ந்து, வனத்தை நம்பி உண்மையாக வாழும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாலும், மேகமலை சுற்றுவட்டாரத்தில் இலவம் பஞ்சு தோட்டங்களை அமைக்க அரசே ஊக்குவித்த பின்னரே அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாகவும், எனவே ஆக்கிரமிப்பாளா்களை நில உரிமை கோர அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞா் வலியுறுத்தினாா்.
இதையடுத்து, இலவம் பஞ்சு தோட்டம் அமைப்பதற்காக வெளியில் இருந்து வந்தவா்கள் எந்த வகையிலும் அப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, மாஞ்சோலை, மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான வழக்கின் தீா்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.