உயிரைப் பணயம் வைத்து குட்கா கடத்தலைத் தடுத்த காவலர்! முதல்வர் விஜய் பாராட்டு!
கோவையில் உயிரைப் பணயம் வைத்து 40 கி.மீ காரில் பயணித்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமைக் காவலரை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியது குறித்து...
கோவையில் உயிரைப் பணயம் வைத்து 40 கி.மீ காரில் பயணித்து குட்கா கடத்தலைத் தடுத்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.
காரின் மேற்கூரையில் உயிரைப் பொருட்படுத்தாமல் ஏறிக் சுமார் 40 கி.மீ தூரம் பயணித்து, குற்றவாளிகளைப் பிடிக்கக் காரணமாக இருந்த கோவில்பாளையம் காவல் நிலையத் தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலை, தமிழ்நாடு முதல்வர், அவரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாகக் குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற காரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றனர்.
Advertisement
Advertisement
அப்போது, தப்பியோட முயன்ற காரின் மேற்கூரையில் தலைமைக் காவலர் வேல்முருகன் தனது உயிரைப் பணயம் வைத்து ஏறி படுத்து, சமயோசிதமாகச் செயல்பட்டார்.
கோவை-அவிநாசி பைபாஸ் சாலையில் அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரம் அவர் காருடன் பயணித்த நிலையில், காவல்துறையினரின் ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கையால் அந்த வாகனம் அவிநாசி அருகே மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்களைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 233 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்தனர்.
தலைமைக் காவலர் வேல்முருகனின் இந்த ஒப்பற்ற வீரதீரச் செயல், கடமை உணர்வு மற்றும் சமயோசித புத்தியைப் பாராட்டி, தமிழ்நாடு முதல்வர், அவரை நேரில் அழைத்து வாழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும் (DGP) தலைமைக் காவலர் வேல்முருகனை நேரில் சந்தித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆபத்தான சூழலிலும் துணிச்சலுடன் செயல்பட்ட தலைமைக் காவலரின் இச்செயல் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Police officer thwarts Gutkha smuggling in 'Singam' movie style; Chief Minister Vijay praises him!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.