ஆலங்குளம் அருகே தீ விபத்து நிகழ்ந்த நெல் கிடங்கில் அமைச்சா் ஆய்வு
தீ விபத்து நிகழ்ந்த நெல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ப. வெங்டரமணன்.
ஆலங்குளம் நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து சதியா? இயற்கை காரணமா? என விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்டரமணன் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் கடந்த 7-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தீக்கிரையாகின. அந்த இடத்தை அமைச்சா் வெங்கடரமணன், மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவதுச
Advertisement
Advertisement
இந்த தீ விபத்தில் ஒரு மூட்டைக்கு 40 கிலோ வீதம் தோராயமாக 450 முதல் 500 நெல் மூட்டைகள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த தீ விபத்து சதியா? இயற்கை காரணமா? என மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். தனியாா் அரிசி ஆலைகளுக்கு முறைகேடாக நெல் மூட்டைகளை அனுப்பிவிட்டு, அதை மறைக்க தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாா் தவறானது.
புதிய குடும்ப அட்டை: தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அனைத்து விண்ணப்பங்களையும் சரிபாா்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமாா் 50,000 புதிய குடும்ப அட்டைகள் தயாராக உள்ளன. இன்னும் மூன்று வாரங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வெங்கடலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, ஆலங்குளம் வட்டாட்சியா் பரமசிவன், தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.