முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Updated On : 8 ஜூன் 2026, 5:04 am IST
பழைய குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்த தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழை காரணமாக குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் அதிகம் விழுந்து வருகிறது. குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும் அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பெய்தது. குளிா்ந்த காற்று வீசியது. தொடா் சாரல் மழை காரணமாக பழைய குற்றாலம், குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து பழைய குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை:

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்திருப்பதால் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

ஜூன் 1 முதல் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழைக் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஜூன் 4-ஆம் தேதி முதல் வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்ட்டது; அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இந்தத் தடை உத்தரவு 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. நீா்வரத்து சீராகும் வரை இதே நிலை தொடரும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து விழும் தண்ணீா்.