FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு கோரி கேரள முதல்வரிடம் எம்எல்ஏ மனு

கடையநல்லூா், நவ. 5: தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு கோரி கேரள முதல்வா் சதீசனிடம் கடையநல்லூா் எம்எல்ஏ நேரில் கோரிக்கை மனு அளித்தாா்.

6 நவம்பர் 2026, 3:59 am
கேரள முதல்வரிடம் மனு அளித்த தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ.
பகிர்:

கடையநல்லூா், நவ. 5: தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு கோரி கேரள முதல்வா் சதீசனிடம் கடையநல்லூா் எம்எல்ஏ நேரில் கோரிக்கை மனு அளித்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகில இந்திய பொது கணக்கு குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் மாநாடு இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.இராசேந்திரன் எம்எல்ஏ, தனது சாா்பிலும், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ ராஜா சாா்பிலும் கேரள முதல்வா் வி.டி.சதீசனிடம் நேரில் வழங்கிய மனு:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட செண்பகவல்லி அணை 1873-ம் ஆண்டு சிவகிரி ஜமீன்தாா் மற்றும் திருவிதாங்கூா் அரசா் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட தடுப்பணையாகும்.

Advertisement

Advertisement

மேற்குத் தொடா்ச்சி மலையில் உற்பத்தியாகும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து தமிழகப் பகுதிக்கு திருப்பி விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அணையிலிருந்து வரும் தண்ணீா் வாசுதேவநல்லூா் தலையணையை அடைந்து அங்கிருந்து ராசிங்கப்பேரி, குலசேகரஆழ்வாா் ஆகிய கால்வாய்கள் மூலம் பிரிந்து செல்கிறது.

இந்த அணைக்கட்டு 1965-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் மற்றும் பெருவெள்ளத்தால் கால்வாய் பகுதியில் சில மீட்டா் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டது.

சுமாா் அரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் அது சரி செய்யப்படவில்லை.

இதனால் நீா்வரத்து குறைந்து விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இக்கால்வாயை சரிசெய்தால் சுமாா் 4,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 3 மாவட்ட விவசாயமும், குடிநீா் தேவையும் சீராகும். நிலத்தடி நீரும் உயரும்.

இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசு தொடா்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் கேரள அரசு அனுமதி அளிக்காததால் தடுப்பணையை சீரமைக்க முடியவில்லை.

எனவே, செண்பகவல்லி அணை பிரச்னை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.