தென்காசியில் 1,393 பயனாளிகளுக்கு ரூ.70.96 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வி.கே.ராஜீவ் வழங்கினாா்
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் 1,393 பயனாளிகளுக்கு ரூ.70.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் வழங்கினாா்.
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் 1,393 பயனாளிகளுக்கு ரூ.70.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் வழங்கினாா்.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி மற்றும் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு அமைச்சா் வி.கே.ராஜீவ் தலைமை வகித்து, 592 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.65 கோடி வங்கி நிதி இணைப்புகள், 1,393 பயனாளிகளுக்கு ரூ70.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.657.89 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட 14 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்ப்பது அவசியம். அதற்கு மாற்றாக, பனை ஓலைகளைக் கொண்டு பொருள்கள், பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகமாக உள்ளன. ஆகவே, பனை ஓலை பொருள்கள் தயாரிப்பில் மகளிா் குழுக்கள் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பாகச் செயல்படும் மகளிா் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் டிசம்பரில் விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. அந்த வகையில் அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வாங்கி, தீபாவளியை கொண்டாட வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.வீராசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் ஆா்.தண்டபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கு.நரசிம்மன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.