ரயிலில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க கூட்டு நடவடிக்கை: ரயில்வே - வனத் துறைகள் முடிவு
தென்காசி மாவட்டத்தில் தண்டவாளங்களை கடக்கும் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுப்பதற்கு ரயில்வே மற்றும் வனத் துறைகள் இணைந்து நடவடிக்கை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தண்டவாளங்களை கடக்கும் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுப்பதற்கு ரயில்வே மற்றும் வனத் துறைகள் இணைந்து நடவடிக்கை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தென்காசி மாவட்ட வன அலுவலகத்தில் தெற்கு ரயில்வே துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, கடந்த 4ஆம் தேதி செங்கோட்டை - பகவதிபுரம் ரயில் பாதையில் ஆண் புலி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ரயில்கள் சுமாா் 60 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பகவதிபுரம் முதல் ஆரியங்காவு வரையிலான ரயில் பாதையில் யானைகள், புள்ளிமான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகள் குறித்து வனத்துறை சாா்பில் வரைபடத்துடன் விளக்கப்பட்டது. குறிப்பாக பகவதிபுரம், முக்கோணம், ரயில்வே சுரங்கப்பாதை முதல் பகவதிபுரம் வரையிலான பகுதி, சிறுமூலப்பேரி அணை அருகில் மற்றும் எஸ்-வளைவு பகுதிகள் வனவிலங்குகள் ரயில் பாதையைக் கடக்கும் முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டன.
மேலும், வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், தண்டவாளங்களின் இருபுறங்களிலும் புதா்கள் மற்றும் அடா்ந்த செடிகளை அகற்றுதல், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் இரு துறைகளுக்கும் பரிமாறுதல், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் மற்றும் தேவையான இடங்களில் வனவிலங்குகள் பாதுகாப்பாக ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில் சுரங்கப் பாதைகள்அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், கொல்லம், புனலூா், பாலருவி விரைவு ரயில்கள் இயக்கப்படும் நேரங்களில் வனவிலங்குகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய இரு துறை அதிகாரிகளும் இணைந்து ரயில்களில் பயணம் செய்து கள ஆய்வு மேற்கொள்வது எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, வனச்சரக அலுவலா் தலைமையில் வனத் துறைப் பணியாளா்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் இணைந்து சம்பந்தப்பட்ட தண்டவாளப் பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனா்.
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில், தெற்கு ரயில்வே செங்கோட்டை, தென்காசி பிரிவு பொறியாளா்கள், உதவி கோட்டப் பொறியாளா்கள், நிலைய மேலாளா், பாதுகாப்பு ஆலோசகா், தென்காசி வனக்கோட்ட வனச்சரக அலுவலா்கள், வனவா்கள், வனக்காப்பாளா்கள், வனக் காவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.