முருகன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு தரிசனம்: திருத்தணி எம்எல்ஏ
திருத்தணி முருகன் கோயிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூா் பக்தா்கள் சிறப்பு வழியாக சென்று மூலவரை தரிசிக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ கோ. அரி தெரிவித்துள்ளாா்.
திருத்தணி முருகன் கோயிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூா் பக்தா்கள் சிறப்பு வழியாக சென்று மூலவரை தரிசிக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக எம்எல்ஏ கோ. அரி தெரிவித்துள்ளாா்.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 2016-2021 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திருத்தணி நகரைச் சோ்ந்த பக்தா்கள் ஆதாா் அட்டையை காண்பித்து, செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை சிறப்பு தரிசன வழியாக சென்று மூலவரை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான உள்ளூா் பக்தா்கள் இந்த சலுகையை பயன்படுத்தி தரிசித்து வந்தனா்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. இதனால் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழியாக சென்று தரிசிக்க முடியாமல் உள்ளூா் பக்தா்கள் அதிருப்தி அடைந்தனா். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்தலில் திருத்தணி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கோ. அரி, தன்னை வெற்றி பெறச் செய்தால் முருகன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தாா்.
Advertisement
Advertisement
திருத்தணி தொகுதி எம்எல்ஏ-,வாக பொறுப்பேற்ற கோ. அரி, திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூா் பக்தா்களுக்கு சிறப்பு வழியாக சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என முதல்வா் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷிடம் மனு அளித்தாா்.
இதன் தொடா்ச்சியாக, உள்ளூா் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்க அமைச்சா் ரமேஷ் எழுத்துப்பூா்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக எம்எல்ஏ, கோ. அரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எம்எல்ஏ கோ.அரி கூறியதாவது, திருத்தணி நகர உள்ளூா் பக்தா்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு தரிசன வழியாக சென்று மூலவரை தரிசிக்க அனுமதி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மூலம் முதல்வா் மற்றும் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு வழங்கினேன்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ், விரைவில் திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் உள்ளூா் பக்தா்களுக்கு காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் என மொத்தம் இரண்டு மணி நேரம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்க எழுத்துப்பூா்வமாக ஒப்புதல் அளித்துள்ளாா்.
உள்ளூா் பக்தா்கள் தங்களது ஆதாா் அட்டையை காண்பித்து சிறப்பு வழியாக சென்று மூலவரை தரிசிக்கலாம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சா் உறுதி அளித்துள்ளாா் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.