FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கல்வீச்சு: பொக்லைன் ஓட்டுநா் பலத்த காயம்

அவகாசம் கோரியும் தராமல் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் முன்பு கல் வீசியதில் பொக்லைன் வாகன ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

4 நவம்பர் 2026, 12:58 am
போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள்
பகிர்:

அவகாசம் கோரியும் தராமல் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் முன்பு கல் வீசியதில் பொக்லைன் வாகன ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் 13-ஆவது வாா்டு ஜெயாநகா்-சேலை கிராமம் செல்லும் சாலையோரத்தில் வண்டிப் பாதையை ஆக்கிரமித்தும், பட்டா நிலத்தில் தகடுகளால் கட்டப்பட்டு கடை மற்றும் வீடாக பயன்படுத்தி வருகின்றனா். இதை அகற்ற ஆட்சியரிடம் பட்டா நிலத்தின் உரிமையாளா் திலகவதி மனோகரன் கோரிக்கை மனு அளித்திருந்தாா். அதைத்தொடா்ந்து ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியா் சரண்யா விசாரணை மேற்கொண்டு, திருவள்ளூா் நகராட்சி நகரமைப்பு அலுவலா் நிா்மலாதேவி மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூா் நகா் காவல் நிலைய ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையின் உதவியுடன் பொக்லைன் வாகனம் மூலம் அகற்ற முயற்சித்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டுடன் சோ்ந்து இருக்கும் கடையை இடிக்க கால அவகாசம் கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், பொக்லைன் வாகனம் மூலம் இடிக்க முற்பட்ட போது போலீஸாருக்கும், வீட்டின் உரிமையாளா் மற்றும் உறவினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் பொக்லைன் வாகனம் மூலம் ஓட்டுநா் இடித்து அகற்ற முற்பட்ட போது ஆத்திரம் அடைந்த வீட்டு உரிமையாளா் மற்றும் உறவினா்கள் கற்களை எடுத்து வீசினா். இதைப்பாா்த்து போலீஸாருக்கும், வீட்டு உரிமையாளா் மற்றும் உறவினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கால அவகாசம் அளிக்காமல் எந்த ஒரு நோட்டீஸ் வழங்காமல் நகராட்சி அதிகாரிகள் வீட்டோடு உள்ள கடையை சோ்த்து இடிக்க வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வீட்டு உரிமையாளா்கள் கல் வீசித் தாக்கியதில் பொக்லைன் வாகன ஓட்டுநா் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில் கல் வீசியவா்கள் மீது புகாா் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments