FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வரலாற்று உச்சம் தொட்ட இந்தியப் பங்குச் சந்தைகள்

இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை, திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டன.

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 12:48 am IST
பகிர்:


இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை, திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டன.
மும்பைப் பங்குச் சந்தையைப் பொருத்தவரை, எல் அண்டு டி, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மிகவும் பரபரப்பாக விற்பனையாகின.
அவற்றின் விற்பனை காரணமாக, சென்செக்ஸ் புள்ளிகள் அதிகபட்சமாக 38,341 புள்ளிகள் என்ற அளவைத் தொட்டது. இது, மும்பை பங்கு வர்த்தகத்தில் சாதனை அளவாகும். இதுவரை, இந்த மாதம் 9-ஆம் தேதி சென்செக்ஸ் பெற்ற 38,076 புள்ளிகள்தான் அதிகபட்ச அளவாக இருந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ் 38,279 புள்ளிகளில் நிலைத்தது. இது, முந்தைய நாளைவிட 330.87 (0.87 சதவீதம்) அதிகம் ஆகும்.
இந்த மாதம் 3-ஆம் தேதிக்குப் பிறகு, ஒரே நாளில் இத்தனை சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும், திங்கள்கிழமை 11,500 புள்ளிகள் என்ற இலக்கைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
வர்த்தகத்தின் மத்தியில் அதிகபட்சமாக 11,565 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி, இறுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 11,552 புள்ளிகளில் நிலைத்தது. இது, முந்தைய நாளைவிட 81 புள்ளிகள் (0.71 சதவீதம்) அதிகம் ஆகும்.
வர்த்தகப் போரில் ஈடுபடக் கூடும் என்ற அஞ்சப்பட்டு வந்த உலகின் இரு பெரு பொருளாதார சக்திகளான அமெரிக்காவும், சீனாவும், இந்த வாரம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.
இது, முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கீழறிங்கி ரூ.70.40-ஆக இருந்த நிலையிலிருந்து, திங்கள்கிழமை மத்தியில் கிடுகிடுவென ரூ.69.60 உயர்ந்தது.
இதனாலும், முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகளை வாங்கிக் குவித்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் வரலாற்று உச்சத்தைத் தொட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments