மார்டன் - கிளாசிக் இணைந்து புதிய பைக்! அறிமுகமானது டிரையம்ப் டிராக்டர் 400!
டிரையம்ப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் இன்று (ஏப். 8) அறிமுகமானது குறித்து...
டிரையம்ப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் இன்று (ஏப். 8) முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மார்டன் - கிளாசிக் என இருவகை திறன்களின் மேம்பட்ட வடிவமாக டிரையம்ப் டிராக்டர் 400 தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரையம்ப் நிறுவனம், 1983 ஆம் ஆண்டு முதல் அதிவேக சொகுசு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
உலகம் முழுவதுமே டிரையம்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக கிளாசிக் வடிவங்களை விரும்பும் இளம் தலைமுறையினர் பலருக்கும் டிரையம்ப் நிறுவன இருசக்கர வாகனங்கள் விருப்பமான ஒன்றாக மாறியுள்ளது.
பழமையுடன் (கிளாசிக்) நவீனத்தையும் சேர்த்து டிராக்டர் 400 என்ற புதிய இருசக்கர வாகனத்தை டிரையம்ப் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 2,46,225 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 27.77 கி.மீ. மைலேஜ் கொடுக்கக் கூடியது.
கிளாசிக் ரெட்ரோ வடிவத்தில் ரேஸ் வாகனத்தின் அம்சங்களுடன் அன்றாட பயன்பாட்டிற்கான இருசக்கர வாகனமாக டிராக்டர் 400 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டி.ஆர். சீரிஸ் 350 சிசி என்ஜின், 8750 ஆர்பிஎம், த்ரக்ஸ்டன் 400 வடிவ புறத்தோற்றத்தையும் டிராக்டர் 400 கொண்டுள்ளது.
பயணத்தின்போது முழங்கால் வைக்கக்கூடிய வகையிலான பெட்ரோல் டேங்க் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணித்தாலும் கால்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. அதிகபட்சமாக 13 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம்.
புறவடிவம் முழுவதும் ரேஸ் வாகனத்திற்கான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணங்கள், அதற்கேற்ற ஸ்டிக்கர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நகரத்தின் தேர்வுகளுக்கு ஏற்ப தட்டையான சேசிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரடுமுரடான பாதையிலும் நீண்ட நேரம் பயணிக்க முடியும்.
இருபுறமும் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாகச் செல்லும்போது கூட பிரேக் பயன்படுத்தலாம். பெரிதாக பாதிப்பு ஏற்படாது. மஞ்சள், கருப்பு, சில்வர் வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.