அதிகரிக்கும் தங்க விலை! 9 காரட் தங்க நகைகள் மாற்றாகுமா?
22 காரட் தங்கம் விலை அதிகரித்திருக்கும் நிலையில், மாற்று வழியாக 9 காரட் தங்க நகைகள் விற்பனைக்கு வருகின்றன.
ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால், ரூ.1.25 லட்சம் செலவாகும் என்ற நிலைக்கு தங்கம் விலை நிலவரம் உள்ளது. இதனால், தற்போது 9 மற்றும் 18 காரட் தங்க நகைகள் அதிகம் விற்பனைக்கு வருகின்றன.
22 காரட் தங்க நகைகளுக்கு மாற்றாக, 9 அல்லது 18 காரட் தங்க நகைகளை வாங்குவதில் சிலருக்கு இன்னமும் தயக்கம் நீடிக்கிறது. ஆனால், நவீன டிசைன்களில், நாள்தோறும் அணிந்து கொள்ள, விதவிதமாக பல டிசைன்களில் வாங்கி வைத்துக் கொள்ள, விலையும் குறைவு என்பதால் பலரும் தற்போது 9 அல்லது 18 காரட் தங்க நகைகளை வாங்குவதற்கு முன்வருகிறார்கள்.
22 காரட் தங்க நகைகள் வாங்குவதாக இருந்தால் இன்றைய விலைப்படி ஒரு கிராம் ரூ.13,700. அதுவே 9 காரட் தங்கம் ஒரு கிராம் விலை (ஜூலை 3) - ரூ.4,800 மட்டுமே. அதிகபட்சமாக ரூ.5000 முதல் 5,300 வரை விற்பனையாகிறது. அதுபோல சான்றிதழ் பெற்ற அல்லது ஹால்மார்க் முத்திரையுடன் 9 காரட் ஒரு கிராம் நாணயம் வாங்க வேண்டும் என்றால் அதன் விலை ரூ.6,000 முதல் ரூ.7000 வரை மட்டுமே.
Advertisement
Advertisement
இது குறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுவது என்னவென்றால், 9 காரட் தங்கம் என்பது 37.5 சதவிகித சுத்த தங்கம் மற்றும் 62.5 சதவிகிதம் செம்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது தங்க நகையின் பலத்தைக் கூட்டுகிறது, நெகிழ்ச்சியடைவதால் எளிதாக சேதமடைவதில்லை. விலையும் குறைவு என்பதால் பலரும் வாங்க முன் வருகிறார்கள்.
9 காரட் வாங்குதில் சாதகம் என்ன?
22 காரட் தங்கத்தின் விலை அதிகம். அதிகத் தூய்மை கொண்டது, உலகளாவிய விலைகளுடன் தொடர்புடையது.
18 காரட் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும். பெரும்பாலும் வைர ஆபரணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
9 காரட் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைவு. அதாவது, ஒரே வடிவமைப்பு மற்றும் எடையுள்ள 22 காரட் தங்க நகைகளின் விலையை விட கிட்டத்தட்ட 40–50 சதவிகிதம் வரை விலை குறைவாக இருக்கும்.
இதனால், கல்லூரி, அலுவலகம் செல்வோர் நாள்தோறும் அணிந்து கொள்ளவும், ஆடைக்கு ஏற்ப பல டிசைன்களில் வாங்கவும் இந்த 9 அல்லது 18 காரட் தங்க நகைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக 14, 18, 22 காரட் தங்க நகைகளைவிட 9 காரட் தங்க நகைகள் விலைக் குறைவாக இருப்பது மக்களை அதிகம் ஈர்ககிறது. இதனை வாங்குவது குறித்து முடிவெடுப்பது ஒவ்வொருவரின் தேவையைப் பொருத்தது. பொதுவாக இரண்டு காரணங்களுக்காக நகை வாங்குவார்கள், ஒன்று அழகாக அணிந்துகொள்ள மட்டும், மற்றொன்று சொத்தாக நகைகளை வாங்கி வைப்பது.
எனவே, அழகாக அணிந்துகொள்ள வாங்குபவர்களின் முதல் தெரிவாக 9 காரட் நகை உள்ளது. இதில், மிக நுட்பமான வேலைப்பாடுகள் செய்ய முடியும் என்பதால், பல நுட்பமான டிசைன்களிலும் கிடைக்கிறது. அதுவே 25 காரட் தங்கம் என்றால், அது மிகவும் மிருதுவானது, டிசைன்கள் செய்ய முடியாது, அன்றாடம் அணிந்துகொள்வதற்கும் ஏற்றது அல்ல. அதனை வெறும் நாணயங்கள், தங்கக் கட்டிகளாகத்தான் வாங்குவது சிறந்தது. எனவே, எவ்வளவு தங்கத்தின் பங்கு குறைகிறதோ, அந்த அளவுக்கு நகைகளின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதால், பலரும் 9 காரட் தங்க நகைகளை விரும்பி வாங்குகிறார்கள்.
சில தங்க நகைக் கடைகள் செய்கூலி, சேதாரமும் குறைவாகவே கணக்கிடுகிறார்கள், தங்கம் விலை லட்சங்களைத் தொட்டிருக்கும் நிலையில், 9 காரட் தங்க நகைகள் பலருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.
With the price of 22-carat gold on the rise, 9-carat gold jewelry is entering the market as an alternative.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.