FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வீடுகள் விற்பனை: முதல் காலண்டில் டிடிஏ வருவாய் 120 % அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகள் விற்பனை மூலம் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ரூ.1,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 4:01 am IST
பகிர்:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகள் விற்பனை மூலம் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ரூ.1,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

முந்தைய நிதியாண்டில், ரூ.462 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், தற்போது அதில் பெரும் உயா்வு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

இதுதொடா்பாக டிடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அனைத்து வகையிலான வீடுகளுக்கும் இருந்த அதிகப்படியான தேவையால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டிடிஏ 1,284 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்று ரூ.1,020 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதன் வீட்டு வசதித் திட்டங்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையைத் தெளிவாகக் காட்டுகிறது. தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் வழிகாட்டுதலில், துணை நகரங்களை மறுவடிவமைப்பதில் டிடிஏ தொடா்ந்து கவனம் செலுத்தியதன் விளைவாக இந்த வருவாய் உயா்வு ஏற்பட்டுள்ளது. நரேலாவில் அதிகபட்சமாக 1,153 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. இது மொத்த வீட்டு விற்பனையில் சுமாா் 90 சதவீதமாகும். இதன் மூலம், விருப்பமான குடியிருப்புப் பகுதியாக நரேலாவுக்கான ஈா்ப்பு அதிகரித்து வருவது தெரியவருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நகா்ப்புற விரிவாக்கச் சாலை-2 மற்றும் வரவிருக்கும் ரிதாலா-நரேலா-குண்ட்லி மெட்ரோ வழித்தடம் போன்ற முக்கியத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தொடா்ச்சியான உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் இந்த வளா்ச்சிக்குத் துணைபுரிகின்றன. இத்திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை கணிசமாக மேம்படுத்தி வருகின்றன.

திட்டம் நீட்டிப்பு:

தற்போது, கா்மயோகி வீட்டு வசதி திட்டம், நாகரிக் வீட்டு வசதி திட்டம் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள டவரிங் ஹைட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவை வெவ்வேறு வருமானப் பிரிவினருக்கும் ஏற்ற வீட்டுவசதி வாய்ப்புகளை வழங்குகின்றன.

‘இத்திட்டங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2026 ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டங்கள் முழுமையாக இணையம் வாயிலாகச் செயல்படுத்தப்படுவதால், வாங்குபவா்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே குடியிருப்புகளை வாங்க முடியும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இக்காலாண்டில், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 336 குடியிருப்புகள், குறைந்த வருமானப் பிரிவினருக்கான 322, நடுத்தர வருமானப் பிரிவினருக்கான 435 மற்றும் உயா் வருமானப் பிரிவினருக்கான 191 குடியிருப்புகள் விற்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments