ஐடி பங்குகளின் எழுச்சியால் சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்வு! 23,400 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!
சென்செக்ஸ் குறியீடு 382.50 புள்ளிகள் உயர்ந்து 74,649.84 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 100.95 புள்ளிகள் உயர்ந்து 23,483.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத் துறைப் பங்குகளின் வலுவான ஏற்றத்தால் உந்தப்பட்டு, இந்திய பங்குச் சந்தை இன்று உயர்வுடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்சென்க்ஸ் 73,815.12 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டிய நிலையில், அங்கிருந்து 1,047.07 புள்ளிகள் உயர்ந்து 74,862.19 என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 382.50 புள்ளிகள் உயர்ந்து 74,649.84 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 100.95 புள்ளிகள் உயர்ந்து 23,483.55 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகபட்சமாக 6.53 சதவீதம் உயர்ந்தன. இன்போசிஸ் 5.66 சதவீதமும், எச்.சி.எல். டெக் 4.08 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.76 சதவீதமும் உயர்ந்தன. அதானி போர்ட்ஸ், டைட்டன், எட்டர்னல், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் அதானி எண்டர்பிரைசஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்த நிலையில் மறுபுறம் என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஆக்சிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
இன்று 2,222 பங்குகள் விலை உயர்ந்தும் 1,803 பங்குகள் விலை சரிந்தும் 165 பங்குகள் எவ்வித மாற்றமுமின்றி அதே நிலையில் தொடர்ந்தன.
துறைவாரியான நிலவரத்தைப் பொறுத்தவரை, நிஃப்டி தகவல் தொழில்நுட்பக் குறியீடு 4.3 சதவீதம் உயர்ந்தன. பொதுத்துறை வங்கிகள், வாகனத் துறை, உலோகத் துறை, நுகர்வோர் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளின் பங்குகளிலும் முதலீட்டாளர்களின் வாங்கும் ஆர்வம் தென்பட்டது. இவை 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. இருப்பினும், மருந்துத் துறை, சுகாதாரத் துறை மற்றும் மின்சாரத் துறை சார்ந்த குறியீடுகள் 0.3 சதவீதம் முதல் 0.8 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
சந்தை மீட்சியடைவதற்குப் பின்னால் இருந்த முதன்மையான உந்துசக்தியான தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட அதிரடி ஏற்றமே ஆகும். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு, கிளவுட் மற்றும் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பச் செலவினங்கள் தொடர்ந்து வலுவாகவே உள்ளன என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் வலுவான வருவாய் அறிக்கைகள் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்களே இந்த ஏற்றத்திற்கு வித்திட்டன.
மத்திய கிழக்கு பகுதியில் போர்நிறுத்தம் ஏற்படுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தபோதிலும், உலகளாவிய சந்தை மனநிலை நிலையாகவே நீடித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை உயர்வுடன் முடிவடைந்தன. அதே வேளையில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்த நிலையில் ஐரோப்பியச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்கச் சந்தை உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 3,911.68 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.28 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 93.76 அமெரிக்க டாலராக உள்ளது.