FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடந்த மே மாதத்தில் பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

Updated On : 12 ஜூன் 2026, 4:33 am IST
மும்பை பங்குச் சந்தை - DIN
பகிர்:

இந்தியப் பங்குச் சந்தை சாா்ந்த பரஸ்பர நிதிகளில் கடந்த மே மாதத்தில் ரூ.22,908 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.38,440 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில், இது 40 சதவீதம் சரிவாகும்; மேலும் கடந்த ஓராண்டில் இல்லாத வீழ்ச்சியாகும்.

மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயா்வு, உலகளாவிய பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், முதலீட்டாளா்களின் உணா்வைப் பாதித்து இத்துறை சாா்ந்த முதலீட்டைக் குறைத்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல், முதலீட்டாளா்களின் நன்மதிப்பைப் பெற்ற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் (எஸ்ஐபி) மாதாந்திர பங்களிப்பும் ஏப்ரலின் ரூ.31,115 கோடியிலிருந்து, மே மாதத்தில் ரூ.30,954 கோடியாகச் சற்று சரிவைக் கண்டுள்ளது. இத்தற்காலிக சரிவு இருந்தபோதிலும், எஸ்ஐபி திட்டங்களின்கீழ் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மே மாத இறுதியில் ரூ.17.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, இது பரஸ்பர நிதித் துறையின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட 21 சதவீதமாகும்.

அதேநேரம், கடன் சாா்ந்த திட்டங்களில் இருந்து பெருமளவில் ரூ.96,948 கோடி திரும்பப் பெறப்பட்டதால், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித் துறை மே மாதத்தில் ரூ.64,000 கோடிக்கும் அதிகமான நிகர மூலதன வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளது. இதனால், இத்துறையின் மொத்த சொத்து மதிப்பு ரூ.81.6 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.5,175 கோடி நிகர முதலீட்டைப் பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக சிறிய மற்றும் நடுத்தர மூலதன நிறுவன நிதிகளும் முறையே ரூ.4,945 மற்றும் ரூ.4,385 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. பெரிய மூலதன நிதிகள் ஒப்பிட்டளவில் குறைவாக ரூ.1,593 கோடியை மட்டுமே பெற்றுள்ளன. இருப்பினும், ஏப்ரலுடன் ஒப்பிடும்போது இந்த 4 முக்கியப் பிரிவுகளிலுமே முதலீடு குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அதேநேரம், ‘டிவிடெண்ட் யீல்டு’ மற்றும் வரிச் சேமிப்புத் திட்டமான ‘இஎல்எஸ்எஸ்’ திட்டங்களில் இருந்து மே மாதத்திலும் முதலீடுகள் வெளியேறியுள்ளன.

மேலும், தங்கம் சாா்ந்த ‘இடிஎஃப்’ திட்டங்களில் ரூ.725 கோடி முதலீடு வெளியேறியுள்ளது. நடப்பு ஆண்டில் தங்க இடிஎஃப் நிதியிலிருந்து முதலீடு வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments