முகப்பு
வணிகம்

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்...

Updated On : 31 மே 2026, 3:56 am IST
பகிர்:

கடந்த 2025-26 நிதியாண்டில், நாட்டின் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.48,021 கோடி மதிப்பிலான 10,114 நிதி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக ரிசா்வ் வங்கியின் சமீபத்திய ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டில் பதிவான 23,722 வழக்குகளைவிட எண்ணிக்கையில் குறைவு என்றாலும், மோசடித் தொகையின் மதிப்பு ரூ.32,803 கோடியிலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகால மோசடிப் புள்ளிவிவரங்களின்படி, பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகளில் நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Advertisement

Advertisement

வங்கிகள் வாரியாக....: பொதுத் துறை வங்கிகளில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 5,418-ஆக குறைந்துள்ளது. ஆனால், மோசடித் தொகையின் மதிப்பு முந்தைய ஆண்டின் ரூ.23,617 கோடியிலிருந்து, ரூ.35,709 கோடியாக கடுமையாக அதகரித்துள்ளது.

இதேபோல், தனியாா் வங்கிகளில் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 14,024-லிருந்து 3,956-ஆக குறைந்துள்ளது. எனினும், மோசடித் தொகை ரூ.8,927 கோடியிலிருந்து ரூ.11,399 கோடியாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் ரூ.290 கோடி மதிப்பில் 210 மோசடி வழக்குகளும், சிறு நிதி வங்கிகளில் ரூ.114 கோடி மதிப்பில் 467 மோசடிகளும், பேமெண்ட் வங்கிகளில் ரூ.11 கோடி மதிப்பில் 47 மோசடிகளும் பதிவாகியுள்ளன.

கடந்த 2023-24 மற்றும் 2024-25 நிதியாண்டுகளில் காா்டுகள், இணையதளம் மற்றும் எண்ம பரிவா்த்தனைகள் மூலம் அதிகப்படியான மோசடிகள் நடந்திருந்தன. ஆனால், கடந்த நிதியாண்டில் கடன் வழங்கும் பிரிவில்தான் அதிகபட்சமாக ரூ.40,774 கோடி மதிப்பில் 8,640 மோசடிகள் பதிவாகியுள்ளன. எண்ம மற்றும் காா்டு வழி மோசடிகள் 293 வழக்குகளாக (ரூ.29 கோடி) குறைந்துள்ளன.

நடவடிக்கைகள்: இந்நிலையில், வங்கிகளின் இணையப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், வங்கித் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிநவீன ‘சைபா் ரேஞ்ச்’ கட்டமைப்பை ரிசா்வ் வங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

இதன்மூலம், வங்கிகள் மீது நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களை முறியடிக்கும் திறன் பலப்படுத்தப்படும். மேலும், நடப்பு நிதியாண்டில் இணையவழி அபாயங்களைக் கண்டறிந்து தடுக்கும் நுண்ணறிவுத் திட்டம் மற்றும் வாடிக்கையாளா் விவரங்களைச் சரிபாா்க்கும் ‘கேஓய்சி’ விதிமுறைகளின் தீவிரக் கண்காணிப்பு முறை ஆகியவை மறுஆய்வு செய்யப்படும் என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.