FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எஸ்பிஐ லாபம் ரூ.25,361 கோடி; 20% வளர்ச்சி

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.25,361 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

5 நவம்பர் 2026, 5:37 am
எஸ்பிஐ - கோப்புப்படம்
பகிர்:

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.25,361 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீத வளர்ச்சியாகும். தனது பரஸ்பர நிதி துணை நிறுவனம் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) பங்கு விற்பனை மூலம் கிடைத்த ஆதாயங்கள் இந்த லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. வங்கியின் தனிப்பட்ட செயல்பாட்டு அடிப்படையில், நிகர லாபம் 14 சதவீதம் உயர்ந்து, ரூ.23,038 கோடியாகப் பதிவாகியுள்ளது.

வங்கியின் முதன்மை நிகர வட்டி வருவாய் 14.69 சதவீதம் அதிகரித்து, ரூ.49,143 கோடியை எட்டியுள்ளது. மொத்த கடன் வழங்கல் 17.84 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள போதிலும், நிகர வட்டி வரம்பு லேசான சரிவுடன் 2.94 சதவீதமாக உள்ளது.

Advertisement

Advertisement

இருப்பினும், உள்நாட்டு அளவிலான வட்டி வரம்பு காலாண்டு அடிப்படையில் 3.11 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் இதை 3 சதவீதத்துக்கு மேல் தொடர்ந்து தக்கவைக்க வங்கி முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் வங்கியின் தலைவர் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் கடன் வளர்ச்சியை 14 முதல் 15 சதவீதமாகவும், டெபாசிட் வளர்ச்சியை 10 முதல் 11 சதவீதமாகவும் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலாண்டு நிலவரப்படி, உள்நாட்டு சில்லறை வணிகக் கடன்கள் 14.54 சதவீதமும், வீட்டுக் கடன்கள் 11.94 சதவீதமும், பெருநிறுவனக் கடன்கள் 16.12 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.

அந்நியச் செலாவணி வைப்புநிதித் திரட்டல் திட்டமான எஃப்சிஎன்ஆர்(பி) மூலம் 1,090 கோடி டாலர் வைப்புநிதியைத் திரட்டியும், வெளிநாடுவாழ் இந்தியர்கள்களுக்கு அதன்கீழ் 883 கோடி டாலர் கடன்களையும் வங்கி வழங்கியுள்ளது.

மேற்காசிய போர் சூழலால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் ரூ.28,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அண்மைக் காலங்களில் முதலீடுகள் பெருகிவரும் தரவு மையத் துறைக்கான வங்கியின் கடன் இருப்பு ரூ.6,000 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியின் சொத்துத் தரம் தொடர்ந்து வலுவடைந்து வருவதைக் காட்டும் வகையில், புதிய வாராக் கடன்கள் ரூ.5,227 கோடியாகக் குறைந்துள்ளதுடன், மொத்த வாராக் கடன் விகிதம் 1.39 சதவீதமாகச் சரிந்துள்ளது. "சூப்பர் எல் நினோ' வறட்சி அச்சுறுத்தல்கள் நிலவியபோதிலும், கடன் தரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என தலைவர் சி.எஸ்.செட்டி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.