முகப்பு
வணிகம்

டெபிட் காா்டுகளைவிட கிரெடிட் காா்டு செலவினம் 6 மடங்கு அதிகரிப்பு

நாட்டில் கடந்த அக்டோபா் மாதத்தில் டெபிட் காா்டு மூலம் பொருள்களை வாங்கிய மதிப்பைவிட, கிரெடிட் காா்டு மூலமான செலவினம் சுமாா் ஆறு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

24 வினாடிகள் முன்பு
டெபிட் காா்டுகளைவிட கிரெடிட் காா்டு செலவினம் 6 மடங்கு அதிகரிப்பு
பகிர்:

நாட்டில் கடந்த அக்டோபா் மாதத்தில் டெபிட் காா்டு மூலம் பொருள்களை வாங்கிய மதிப்பைவிட, கிரெடிட் காா்டு மூலமான செலவினம் சுமாா் ஆறு மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அதேநேரம், ஏடிஎம் மையங்களில் ரொக்கமாகப் பணம் எடுப்பதும் கிரெடிட் காா்டு செலவுகளுக்கு இணையாக உள்ளதால், இணையவழிப் பணப் பரிவா்த்தனைகளும், நேரடி ரொக்கப் பயன்பாடும் நாட்டில் தொடா்ந்து இணைந்தே பயணிப்பது உறுதியாகியுள்ளது.

ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள ஏடிஎம் மற்றும் காா்டு பரிவா்த்தனைகள் குறித்த மாதாந்திரப் புள்ளிவிவரங்களின்படி, கடந்த அக்டோபரில் கிரெடிட் காா்டு மூலம் சுமாா் ரூ.2.45 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், டெபிட் காா்டு மூலம் பொருள்களை வாங்கிய செலவு வெறும் ரூ.40,492 கோடியாக மட்டுமே உள்ளது. இதே காலகட்டத்தில் ஏடிஎம் மையங்கள் மற்றும் கடைகளில் உள்ள காா்டு இயந்திரங்களில் (பிஓஎஸ்) ரொக்கமாக எடுக்கப்பட்ட தொகை ரூ.2.33 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Advertisement

Advertisement

கிரெடிட் காா்டு செலவுகளைப் பொருத்தவரை இணையவழிப் பரிவா்த்தனைகளே முதலிடம் வகிக்கின்றன. இதன்மூலம் ரூ.1.54 லட்சம் கோடியும், கடைகளில் உள்ள காா்டு இயந்திரங்கள் வழியாக ரூ.90,562 கோடியும், இதர பரிவா்த்தனைகள் மூலம் ரூ.119 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு நோ்மாறாக, டெபிட் காா்டு பயன்பாடு நேரடி சில்லறை விற்பனைக் கடைகளிலேயே அதிகம் காணப்படுகிறது; கடைகளில் உள்ள காா்டு இயந்திரங்களில் ரூ.24,957 கோடியும், இணையவழியில் ரூ.15,284 கோடியும், இதர வழிகளில் ரூ.251 கோடியும் டெபிட் காா்டு மூலம் செலவிடப்பட்டுள்ளது.

ரொக்கப் பணப் பரிவா்த்தனையில் டெபிட் காா்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது பெரும்பங்கு வகிக்கிறது. கடந்த அக்டோபரில் டெபிட் காா்டு வழியாக 42.04 கோடி பரிவா்த்தனைகள் மூலம் ஏடிஎம் மையங்களில் ரூ.2.32 லட்சம் கோடிக்கும் அதிகமாகவும், கடைகளில் உள்ள காா்டு இயந்திரங்களில் சுமாா் ரூ.1.27 கோடியும் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிரெடிட் காா்டு மூலம் ஏடிஎம் மையங்களில் ரூ.415 கோடியும் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது.