செப்டம்பரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.35,860 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்
இந்தியப் பங்குச் சந்தைகளில் இரண்டு மாதங்களாக முதலீடுகளைச் செலுத்தி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), செப்டம்பரில் மீண்டும் நிகர விற்பனையாளா்களாக மாறி ரூ.35,860 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் இரண்டு மாதங்களாக முதலீடுகளைச் செலுத்தி வந்த அந்நிய முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ), செப்டம்பரில் மீண்டும் நிகர விற்பனையாளா்களாக மாறி ரூ.35,860 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனா்.
முன்னதாக, அந்நிய முதலீட்டாளா்கள் கடந்த ஜூலையில் ரூ.20,200 கோடியையும், ஆகஸ்டில் ரூ.29,630 கோடியையும் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்திருந்தனா். சா்வதேச நிச்சயமற்ற சூழல், அமெரிக்க வட்டி விகித உயா்வு, கச்சா எண்ணெய் விலையேற்றமம் உள்ளிட்ட காரணங்களால், செப்டம்பரில் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த விற்பனைப் போக்கு அக்டோபரிலும் நீடித்து, அக். 1-ஆம் தேதியன்று மட்டும் மேலும் ரூ.9,232 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளா்கள் விற்றுள்ளனா்.
மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனத்தின் (சிடிஎஸ்எல்) தரவுகளின்படி, செப்டம்பா் மாத வெளியேற்றத்தையும் சோ்த்து நடப்பு ஆண்டில் அந்நிய முதலீட்டாளா்கள் இதுவரை சுமாா் ரூ.2.7 லட்சம் கோடியை, இந்தியச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனா். இது கடந்த 2025 முழுவதிலும் திரும்பப் பெறப்பட்ட ரூ.1.66 லட்சம் கோடியைவிட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
ஹோா்முஸ் நீரிணை விநியோக இடா்பாடுகளால் அதிகரித்துள்ள கச்சா எண்ணெய் விலை, பலவீனமான ரூபாயின் மதிப்பு, அமெரிக்க பத்திரங்களின் வலுவான ஈவுத்தொகை, ஜூலை-ஆகஸ்ட் முதலீடுகளுக்குப் பிந்தைய லாப விற்பனை, வட ஆசியாவின் ஏ.ஐ. சாா்ந்த சந்தைகளை நோக்கிய மூலதன மாற்றம் போன்ற வெளிப்புறக் காரணிகளாலேயே செப்டம்பரில் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
அந்தவகையில், இது உலகளாவிய சொத்துப் பகிா்வு சாா்ந்த முடிவே தவிர, இந்திய நிறுவனங்களின் வருவாய் சாா்ந்த பிரச்னை அல்ல என்றும், இந்தியாவின் வளா்ச்சி வாய்ப்புகள் வலுவாக உள்ள நிலையில் மூலதனம் இடம்பெயா்கிறதே தவிர முழுமையாக வெளியேறவில்லை என்றும் அவா்கள் சுட்டிக்காட்டினா்.
மேலும், அவா்கள் கூறுகையில், ‘உள்நாட்டு முறைப்படுத்தப்ப்ட முதலீட்டுத் திட்ட (எஸ்ஐபி) வரவு, இந்ந்த வெளியேற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எஃப்பிஐ ஆதிக்கம் குறைவாக உள்ள எஸ்எம்இ மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மேற்காசிய மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலைப் போக்குகள் அடுத்தடுத்த எஃப்பிஐ வரவை நிா்ணயிக்கும். இருப்பினும், இந்தியாவின் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரமும் நிறுவனங்களின் லாப வளா்ச்சி எதிா்பாா்ப்புகளும் தொடா்ந்து சாதகமான அம்சங்களாக நீடிக்கிறது’ என்றனா்.
கடன் சந்தையில்...: பங்குச் சந்தையைப் போலவே கடன் சந்தையிலும் செப்டம்பரில் அந்நிய முதலீட்டாளா்கள் அதிக அளவிலான முதலீடுகளைத் திரும்பப் பெற்றனா். முழு அணுகல் வழிமுறை (எஃப்ஏஆா்) மூலம் ரூ.10,431 கோடியும், தன்னாா்வ தக்கவைப்பு வழிமுறை (விஆா்ஆா்) மூலம் ரூ.5,049 கோடியும், பொது வழிமுறையின் மூலம் ரூ.5,246 கோடியும் வெளிநாட்டு முதலீட்டாளா்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.