FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினம் ஒரு தேவாரம்

100. படையார் தருபூதப் - பாடல் 5

அபீதகுஜாம்பாள். உண்ணாமுலையம்மை

Updated On : 27 ஜூன் 2018, 8:55 pm IST
பகிர்:


பாடல் 5:

    வீறார் முலையாளைப் பாகம் மிக வைத்துச்
    சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்
    ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை
    வேறா நினைவாரை விரும்பா வினை தானே

விளக்கம்:

Advertisement

Advertisement

வீறு=தனிப் பெருமை; ஏறான்=ஏற்றான், ஏறினை உடையவன, எருதினை வாகனமாக உடையவன்; ஏற்றான் என்ற சொல் எதுகை நோக்கி ஏறான் என திரிந்தது. வேறா=உயிர்களினின்றும் வேறுபட்டவனாக. வேறா என்ற சொல்லுக்கு உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள பாசத்திலிருந்து விடுபட்ட நிலை என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். அவ்வாறு பற்றற்ற நிலையில் நின்று இறைவனை தியானிக்கும் அடியார்கள் யான் எனது என்ற தற்போதம் நீங்கிய நிலையில் இருப்பதால், வினைகளால் அவர்கள் எந்த விதமான மாறுதலையும் அடைவதில்லை. இந்த தலத்து இறைவியின் திருநாமம் அபீதகுஜாம்பாள். உண்ணாமுலையம்மை என்று பொருள். எனவே தனிச்சிறப்பு வாய்ந்த மார்பன்களைக் கொண்ட அன்னை என்று கூறுவது பொருத்தம் தானே. இறைவனின் சிறப்புகளை உணர்ந்து, அவன் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டுள்ள நிலையினை உணர்ந்து, வழிபடவேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுவது நமக்கு அப்பர் பிரான் தில்லை தலத்தின் மீது திருத்தாண்டகப் பாடலை (6.1.5) நினைவூட்டுகின்றது. அருந்துணை-ஒப்பற்ற துணை; வான்புலன்கள்=வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார். 

    அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும்
        அருமருந்தை  அகல் ஞாலத்து  அகத்துள் தோன்றி
    வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள்
         அகத்து அடக்கி மடவாரோடும்
    பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப்
         பொது நீக்கித் தனை நினைய  வல்லோர்க்கு என்றும்  
    பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
         நாளெல்லாம் பிறவா நாளே

சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார்.. பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது.

பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப்படும் கருத்து திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலில் மணிவாசகர், சிவபிரான் அல்லாத மற்றைய தேவர்களைத் தேவர்கள் அல்ல  என்று கருதி, அவர்களை வெறுக்காதவரைக் கண்டால் நாம் பயம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

    வெருவரேன் வேட்கை வந்தால் வினைக் கடல்
        கொளினும் அஞ்சேன்
    இருவரால் மாறு காணா எம்பிரான்
         தம்பிரானாம்
    திருவுரு அன்றி மற்று ஓர் தேவர்
         எத்தேவர் என்ன
    அருவராதவரைக் கண்டால் அம்ம
         நாம் அஞ்சுமாறே   

பொழிப்புரை:

ஒப்பில்லாத வண்ணம் சிறந்த அழகினை உடைய மார்பகங்கள் கொண்ட பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும், மிகுந்த சீற்றத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக வந்த காலனின் சினத்தை அடக்கி அழித்தவனும், எருதினைத் தனது வாகனமாக உடையவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை, மற்ற சிறு தெய்வங்களுடன் ஒப்பாக நினையாமல் வேறாக நினைக்கும் அடியார்களை சென்று அடைவதற்கு வினைகள் விரும்பா.

Audio  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments