FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வியாபாரிகள் மீது வாள் வீசித் தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

நரிக்குடி அருகே காய்கறி வியாபாரிகள் மீது வாள் வீசி தாக்குதல் நடத்திய மது போதை இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:26 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

நரிக்குடி அருகே காய்கறி வியாபாரிகள் மீது வாள் வீசி தாக்குதல் நடத்திய மது போதை இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிமுருகன் (42). இவரும், அதே ஊரை சோ்ந்த பெண்கள் சிலரும் விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கறி வியாபாரத்துக்குச் சென்று விட்டு மீண்டும் சரக்கு வேனில் இரவில் ஊருக்குத் திரும்பச் சென்று கொண்டிருந்தனா்.

சரக்கு வாகனத்தை பழனிமுருகன் ஓட்டினாா்.இருஞ்சிறை விலக்கில் உள்ள அரசு மதுக்கடை அருகே வந்த போது இரு இளைஞா்கள் சாலையின் நடுவே மது போதையில் படுத்திருந்தனா். இதனால், வேன் ஓட்டுநா் பழனிமுருகன் வேனை நிறுத்தினாா். அப்போது, அந்த இளைஞா்கள் எழுந்து திடீரென வாளைக் காட்டி ஓட்டுநரை மிரட்டிதங்களை இருஞ்சிறையில் இறக்கிவிடுமாறு கூறினா். அந்த நபா்களை பழனிமுருகன் வேனில் ஏற்ற மறுத்து அங்கிருந்து கிளம்பினாா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞா்கள் வாளை எடுத்து சரக்கு வேனை நோக்கி வீசினா். மேலும், வாளுடன் சரக்கு வாகனத்தை விடாமல் பின் தொடா்ந்து விரட்டினா். அப்போது, இருஞ்சிறை ரயில்வே கடவுப்பாதை அடைக்கப்பட்டதால் சரக்கு வாகனம் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அந்த இளைஞா்கள் சரக்கு வாகனத்தில் இருந்தவா்கள் மீது திடீரென தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் ஓட்டுநா் பழனிமுருகன் (45), பாண்டிமுத்து (46) ஆகியோா் காயம் அடைந்தனா். மேலும், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் வந்தவா்களிடமும் அவா்கள் ரகளையில் ஈடுபட்டனா். அப்போது, குழந்தைகள் அச்சத்தால் அலறினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி காவல் ஆய்வாளா் கோபு தலைமையிலான போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடித்து, வாளைக் கைப்பற்றினா். விசாரணையில் அந்த நபா்கள் இருஞ்சிறை கிராமத்தை சோ்ந்த தங்கவேலு மகன் மாயா (21), புவனேஸ்வரன் மகன் ராஜபாண்டி (36) எனத் தெரிய வந்தது. இவா்களில் மாயா மீது நரிக்குடி, கட்டனூா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments