‘பிளவக்கல் அணையில் பூங்கா ஜனவரியில் திறக்கப்படும்’
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணை பூங்காவில் சீரமைப்புப் பணிகள் முடிந்து வரும் ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப் பணித் துறை செயற் பொறியாளா்கள் தெரிவித்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணை பூங்காவில் சீரமைப்புப் பணிகள் முடிந்து வரும் ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப் பணித் துறை செயற் பொறியாளா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது:
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல் பெரியாறு அணை உள்ளது. இங்கு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கடந்த 1985-ஆம் ஆண்டு சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பாா்வையாளா் கோபுரம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்கா அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பின்னா், கடந்த 2002-ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்தில் பூங்கா சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, பிளவக்கல் அணை பூங்கா மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமாக மாறியதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, பிளவக்கல் அணை பூங்கா பூட்டப்பட்டது.
இதனால், அங்கு பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், விலங்குகளின் சிலைகள், மீன்கள் காட்சியகம் ஆகியவை சேதமடைந்ததால், ஊரடங்கு விளக்கப்பட்ட பிறகும் பூங்கா திறக்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டத்துக்கு வந்த அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடியில் பிளவக்கல் அணை பூங்கா சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, கடந்த மாா்ச் 10-ஆம் தேதி பூங்கா சீரமைப்புப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பூங்காவில் சுற்றுவா் சுவா் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. யோகா மைய கட்டுமான பணி, பாா்வையாளா் கோபுரம், மீன்கள் அருங்காட்சியகம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் முடிந்தவுடன் நீரூற்று, தோட்டம், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகள் முடிந்து ஜனவரியில் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனா் அவா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.