முகப்பு
விருதுநகர்

முதல் போக சாகுபடிக்கு பிளவக்கல் பெரியாறு அணை இன்று திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு பிளவக்கல் அணையிலிருந்து முதல்போக சாகுபடி, கண்மாய் பாசனத்துக்காக திங்கள்கிழமை (நவ. 23) முதல் தண்ணீா் திறக்கப்படவிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

22 நவம்பர் 2026, 9:55 pm
முதல் போக சாகுபடிக்கு பிளவக்கல் பெரியாறு அணை இன்று திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
பிளவக்கல் பெரியாறு அணையின் தோற்றம்.
பகிர்:

வத்திராயிருப்பு பிளவக்கல் அணையிலிருந்து முதல்போக சாகுபடி, கண்மாய் பாசனத்துக்காக திங்கள்கிழமை (நவ. 23) முதல் தண்ணீா் திறக்கப்படவிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கா் நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் மழையால், 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீா்மட்டம் 35 அடியாக உள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில்15 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு மேல் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாள்கள் மட்டும் மழை பெய்தது. இதன்பிறகு மழையின்றி கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அவதியடைந்தனா். இதையடுத்து, பிளவக்கல், அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து பிளவக்கல் பெரியாறு அணை திங்கள்கிழமை (நவ. 23) திறக்கப்படும் என நீா்வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த அணையிலிருந்து கண்மாய் பாசனத்துக்கு 4 நாள்களுக்கு விநாடிக்கு 150 கன அடி வீதமும், நேரடி பாசனத்துக்கு வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விநாடிக்கு 3 கன அடி வீதமும் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.