முகப்பு
இணையம் ஸ்பெஷல்

46 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டும் தொழிலாளி! நெகிழ்வின் தருணங்கள்!

46 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் தொழிலாளி ஆர்.எம். சந்திரசேகரன் குறித்து...

Updated On : 14 ஜூன் 2026, 11:30 am IST
போஸ்டர் ஒட்டும் தொழிலாளி ஆர்.எம். சந்திரசேகரன் - படம்: தினமணி
பகிர்:

விழுப்புரம்: தற்போதைய நவீன, வளர்ச்சியடைந்த காலத்தில் சில தொழில்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அவ்வாறு செல்லும் தொழில்களில் ஒன்றான சுவரொட்டி ஒட்டும் தொழிலை மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், விழுப்புரம் நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் பணியை கடந்த 46 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் ஆர்.எம். சந்திரசேகரன் (64).

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை பூர்வீமாகக்கொண்டஇவர் கடந்த 1979 -ஆம் ஆண்டில் தனது தாயாருடன் விழுப்புரம் நகரத்துக்கு இடம்பெயர்ந்தார்.

2 -ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள சந்திரசேகரன், 1980ஆம் ஆண்டில் சுவரொட்டிகளை ஒட்டும் பணியைத் தொடங்கி, தற்போது வரை தொடர்ந்து 46 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

தொடக்கக் காலத்தில் சுவரொட்டிக்கு 50 பைசா வீதம் கட்டணம் வசூலித்து வந்த சந்திரசேகரன், தற்போது ஒரு சுவரொட்டிக்கு ரூ. 4 முதல் ரூ. 5 வரை கட்டணம் நிர்ணயித்து வாங்கி வருகிறார். அதே நேரத்தில் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விழாக்கள் சம்பந்தமான சுவரொட்டிகள், கண்ணீர் அஞ்சலி, காலமானார் போன்ற சுவரொட்டிகளை ஒட்டும் பணிக்கு குறைந்தளவில் கட்டணத்தை வசூலித்துக் கொள்வதும் குறிப்பிட்டத்தக்கது.

ரஜினி ரசிகராகத் தொடங்கினேன்: 1980இல் ரஜினி நடித்த பில்லா திரைப்படம் வெளியானது. அப்போது படத்துக்கான சுவரொட்டிகளை ஒட்டும் பணியைத் தொடங்கியது எனது வாழ்க்கை. தொடர்ந்து 46 ஆண்டுகளாக சுவரொட்டி ஒட்டும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அன்று முதல் வரை மிதிவண்டியில் சென்றுதான் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறேன். விழுப்புரம் மட்டுமல்லாது, சென்னையிலும் சுவரொட்டிகளை ஒட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். இதற்காக ரயிலில் மிதிவண்டியை எடுத்துச் சென்று தாம்பரத்தில் இறங்கி, அங்கிருந்து சென்னை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளேன். சில ஆண்டுகள் சென்னையில் தங்கி இந்த பணியை மேற்கொண்ட நிலையில், மீண்டும் விழுப்புரத்துக்கு வந்து எனது பணியைத் தொடங்கி தற்போது வரை மேற்கொண்டு வருகிறேன். இதுபோன்று கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாநகரங்களுக்குச் சென்றும் சுவரொட்டி ஒட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறேன் என்கிறார் சந்திரசேகரன்.

தினமும் வேலை கிடைக்கிறது, செய்யத்தான் ஆள்களில்லை: விழுப்புரம் நகரத்தில் தற்போது சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுவர்கள் நான் உள்பட 3 பேர் மட்டும்தான். தினமும் சுவரொட்டி ஒட்டும் பணி கிடைக்கிறது. அந்த காலத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டினால் 40 பைசா முதல் 50 பைசா மட்டும்தான் கிடைத்தது. ஆனால், இன்று 100 சுவரொட்டிகளை ஒட்டினால் ரூ. 400 முதல் ரூ. 500 வரை கிடைக்கிறது. ஆனால் இந்தப் பணியைத் தற்போது செய்வதற்குத்தான் ஆள்கள் இல்லை.

இரவு 10 மணிக்கு மேல்தான் சுவரொட்டிகளை ஒட்டும் பணியைத் தொடங்குவோம். அதிகாலைக்குள் சுவரொட்டிகளை ஒட்டி முடித்துவிடுவோம். சீக்கிரமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதன் மீது மற்றவர்கள் சுவரொட்டியை ஒட்டிச் செல்வதால், உரியவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகுதான் பணியைத் தொடங்குவேன்.

இரவு நேரங்களில் பணியில் ஈடுபடுவதால் காவல் துறையினரின் கண்காணிப்பும் எங்கள் மீது இருக்கும். அரசுக்கோ, காவல் துறைக்கு எதிராகவோ சுவரொட்டிகள் ஒட்டும்போது கவனம் தேவைப்படும். அதே நேரத்தில் இரவு நேர ரோந்து வரும் காவல் துறையினர் நான் வைத்திருக்கும் சுவரொட்டிகளை முழுமையாக ஆய்வு செய்து அனுப்புவர். நான் கல்வியறிவு அதிகம் இல்லாதவர் என்பதால், சில நேரங்களில் சிக்கல்களையும் சந்தித்துள்ளேன். மாவட்ட நிர்வாகத்துக்கான எதிரான சுவரொட்டியை ஆட்சியரக வளாகத்தில் ஒட்டியதால், காவல்துறை மூலம் வழக்குப்பதியப்பட்டு, அபாரதம் ரூ.1,500 செலுத்தியும் உள்ளேன் என்கிறார் சந்திரசேகரன்.

வீட்டுக்கே வந்து சுவரொட்டியை வழங்கிச் செல்வர்:

நான் விழுப்புரம் மருதூர் தர்மராஜா தெருவில் வசித்து வருகிறேன். தொடர்ந்து, இந்தப் பணியை மேற்கொண்டு வருவதால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு பொது நல அமைப்புகள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு நான் அறிமுகமானவர் என்பதால், என் வீடு தேடி வந்து சுவரொட்டிகளை வழங்கி, இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு கூறி பணத்தை வழங்கிச் செல்வர். எல்லா நாள்களிலும் வேலை கிடைத்து வருகிறது.

காலமானார், கண்ணீர் அஞ்சலி போன்ற சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், கோயில் திருவிழாக்கள் சார்ந்த சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும் நான் அவர்கள் கொடுத்த தொகையை வாங்கிக் கொள்வேன். கட்டாயப்படுத்தி கேட்பதில்லை. துக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல், துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்பதன் அடையாளமாக அவர்கள் தரும் தொகையை வாங்கிச் செல்வேன். அதுபோல, கோயில் விழாக்கள், திருவிழாக்கள் தொடர்பான சுவரொட்டிகளுக்கும் கொடுத்த தொகையை கூலியாக வாங்கிக் கொள்வேன். இறைவனுக்காக செய்யும் பணியாக இதைக் கருதுகிறேன் என்கிறார் சந்திரசேகரன்.

முதியோர் உதவித் தொகை கிடைக்க வேண்டும்: தற்போது எனக்கு 64 வயதாகிவிட்டது. கல்வியறிவு இல்லாத நிலையில் சுவரொட்டி ஒட்டும் பணியைத் தொடங்கி வருகிறேன். தற்போது அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித் தொகை கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரும், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த சிலரும் இதை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். அந்த தொகை கிடைத்தால் எனக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சந்திரசேகரன்.

மிதிவண்டியில் சென்று தொடர்ந்து 46 ஆண்டுகளாக சுவரொட்டி ஒட்டும் பணி, குறிப்பிட்ட சுவரொட்டிகளுக்கு தொகை வசூலிப்பதில் தளர்வு செய்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் விழுப்புரம் நகரின் வித்தியாசமான தொழிலாளியாக வலம் வருகிறார் சந்திரசேகரன்.

summary

About R.M. Chandrasekaran, a worker who has been pasting posters for 46 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.