முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒட்ட.. ஒட்ட..! சுவரொட்டிகள் ஆன வாழ்வு!

நவீன, வளர்ச்சியடைந்த காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலை மேற்கொள்வோர் வெகுவாகக் குறைந்துவிட்டனர்.

Updated On : 21 ஜூன் 2026, 4:03 am IST
சுவரொட்டிகள்
பகிர்:

நவீன, வளர்ச்சியடைந்த காலத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் தொழிலை மேற்கொள்வோர் வெகுவாகக் குறைந்துவிட்டனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் மிதிவண்டியில் சென்று நாற்பத்தாறு ஆண்டுகளாக அந்தப் பணியை மேற்கொண்டு வித்தியாசமான தொழிலாளியாக வலம் வருகிறார் அறுபத்து நான்கு வயதான சந்திரசேகரன்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை பூர்விமாகக் கொண்ட இவர், 1979-ஆம் ஆண்டில் தனது தாயாருடன் விழுப்புரம் நகரத்துக்கு இடம்பெயர்ந்தார். மருதூர் தர்மராஜா தெருவில் வசிக்கும் அவரிடம் பேசியபோது:

'இரண்டாம் வகுப்பு வரையே படித்தேன். 1980-இல் ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' திரைப்படம் வெளியானபோது, சுவரொட்டிகளை ஒட்டும் பணியைத் தொடங்கினேன். இன்று வரை மிதிவண்டியில் சென்றுதான் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறேன்.

Advertisement

Advertisement

ரயிலில் மிதிவண்டியை எடுத்துச் சென்று தாம்பரத்தில் இறங்கி, அங்கிருந்து சென்னை மாநகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளேன். சில ஆண்டுகள் சென்னையில் தங்கி இந்தப் பணியை மேற்கொண்ட நிலையில், மீண்டும் விழுப்புரத்துக்கு வந்துவிட்டேன். கோயம்புத்தூர், திருச்சி போன்ற மாநகரங்களுக்குச் சென்றும் சுவரொட்டி ஒட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறேன்.

தினமும் வேலை: விழுப்புரம் நகரத்தில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபடுபவர்கள் நான் உள்பட 3 பேர் மட்டும்தான். தினமும் சுவரொட்டி ஒட்டும் பணி கிடைக்கிறது. அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு நான் அறிமுகம் என்பதால், என் வீடு தேடி வந்து சுவரொட்டிகளைக் கொடுத்து, பணத்தை வழங்கிச் செல்வர்.

அந்தக் காலத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டினால் 40 பைசா முதல் 50 பைசா வரையில் கிடைத்தது. இன்று 100 சுவரொட்டிகளை ஒட்டினால் ரூ.400 முதல் ரூ.500 வரை கிடைக்கிறது. கோயில் திருவிழாக்கள் சம்பந்தமான சுவரொட்டிகள், கண்ணீர் அஞ்சலி-காலமானார் போன்ற சுவரொட்டிகளை ஒட்ட கட்டணத்தைக் குறைத்துவிடுவேன்.

இரவு 10 மணிக்கு மேல்தான் சுவரொட்டிகளை ஒட்டும் பணியைத் தொடங்கி, அதிகாலைக்குள் ஒட்டி முடித்து விடுவோம். அரசுக்கோ, காவல் துறைக்கு எதிராகவோ சுவரொட்டிகள் ஒட்டும்போது கவனம் தேவைப்படும். இரவு ரோந்து வரும் காவல் துறையினர் நான் வைத்திருக்கும் சுவரொட்டிகளை முழுமையாக ஆய்வு செய்துதான் அனுப்புவர்.

மாவட்ட நிர்வாகத்துக்கு எதிரான சுவரொட்டியை ஆட்சியரக வளாகத்தில் ஒட்டியதால், காவல் துறை மூலம் வழக்குப் பதியப்பட்டு, அபராதமும் செலுத்தியுள்ளேன்.

எனக்கு 64 வயதாகிவிட்டது. கல்வியறிவு இல்லாத நிலையில், சுவரொட்டி ஒட்டும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை எனக்குக் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்' என்கிறார் சந்திரசேகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments