FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கல்கிக்கு ஒரு மாங்கனி!

எழுத்தாளர் கல்கி மீது தமிழக மக்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர் ஒரு விழாவுக்கு வருகை தருகிறார் என்றால், பெருமளவில் கூட்டம் கூடும்.

Updated On : 15 செப்டம்பர் 2024, 12:00 am IST
எழுத்தாளர் கல்கி
பகிர்:

எழுத்தாளர் கல்கி மீது தமிழக மக்கள் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அவர் ஒரு விழாவுக்கு வருகை தருகிறார் என்றால், பெருமளவில் கூட்டம் கூடும். திரைநட்சத்திரங்களைப் போன்ற தோற்றம் கொண்டவர் அல்ல என்றாலும், அவருடைய ஆகிருதி அப்படி! அவர் இருந்தபோது நடைபெற்ற முக்கிய விழாக்களில் ஏதாவது ஒரு வகையில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார். விழாக்களில் அவருடன் செல்லும் பாக்கியத்தை ஆசிரியர் பகீரதன் பெற்றிருந்தார்.

குறிஞ்சிப்பாடி எனும் ஊரில் உயர்நிலைப் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் பங்கேற்க வருமாறு கல்கிக்கு பலமுறை பள்ளி நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், கல்கியும் தவிர்த்தபடியே இருந்தார்.

காந்தி மண்டபம் அமைக்க நிதி வேண்டி, ஓர் அமைப்பை கல்கி தொடங்கியிருந்தார். பள்ளி விழாவுக்கு வருவதாக இருந்தால், இருநூறு ரூபாய் நிதியை (இருநூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை) அளிப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் கடிதம் எழுதினர். இதைக் கண்ட கல்கி விழாவுக்கு வருவதாக இசைவு தெரிவித்தார். ஆசிரியர் பகீரதனுடன் சென்று விழாவில் பங்கேற்றார்.

Advertisement

Advertisement

விழாவில் கல்கி சிறப்பாகச் சொற்பொழிவாற்றினார். பின்னர், பள்ளி நிர்வாகிகள் கல்கியிடம் அளித்து ஒரு மாங்கன்றை நடச் சொன்னார்கள். மகிழ்ச்சியுடன் மரக்கன்றை நட்டு, தண்ணீரும் ஊற்றினார் கல்கி.

'எத்தனையோ இடங்களில் இந்த மாதிரி மரக்கன்று நடுவது தடபுடல்படுகிறது. ஆனால், அடுத்த நாளே மரத்தை எல்லோரும் மறந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. தயவு செய்து இந்த மரத்தை விட்டுவிடாதீர்கள்'' என்று பள்ளி நிர்வாகிகளைக் கேட்டு கொண்டார் கல்கி.

அப்போது அங்கே இருந்த ஆசிரியர் ஒருவர் எழுந்து, 'ஐயா பயப்படாதீர்கள். இந்த மாஞ்செடிகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்போம். வளர்த்து அதில் காய்க்கிற முதல் பழத்தைப் பறிப்பதற்கு ஒரு விழாவை நடத்துவோம். அதற்கு உங்களையே அழைப்போம்'' என்று உறுதிபடக் கூறினார். கல்கியும் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். இத்துடன் அவர் இந்த சம்பவத்தை விட்டுவிடவில்லை.

அந்தப் பள்ளிக்கு அடிக்கடி கடிதம் எழுதி 'நான் நட்டு வைத்த மாஞ்செடி என்னவாயிற்று? அதற்கு தண்ணீர் ஊற்றி வருகிறீர்களா?'' என்று கேட்பார். மாஞ்செடியும் வளர்ந்து, மாமரமாக நின்று காய்க்கத் தொடங்கியது.

கல்கி நட்ட மாமரத்தில் காய்ந்த முதல் மாங்கனியைப் பறிப்பதையும், கல்கியின் நினைவாகவும் ஒரு விழாவையே பள்ளி நிர்வாகிகள் நடத்தினார்கள். அப்போது கல்கி மறைந்துவிட்டார். இதனால் விழாவில் ஆசிரியர் பகீரதனை அழைத்தார்கள். அவருக்கு பள்ளி நிர்வாகிகள் முதல் மாங்கனியை வழங்க, அவருடம் கண் கலங்கப் பெற்றுகொண்டார்.

கல்கியின் சார்பாக, மாங்கனியைப் பெற்றுகொண்டு பேசுவதற்காக மைக்கின் முன்பு சென்றார் ஆசிரியர் பகீரதன். பேச்சு வரவில்லை. கல்கியின் நினைவு பொங்கி வர, பகீரதனுக்கு கண்ணீர் வழிந்தது.

இதனால் எதுவும் பேச முடியாமல் விக்கித்துப் போய் நின்றார். துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த நேரத்தில் விழாவில் பங்கேற்றோரும் கண்ணீர் விட்டனர்.

இதைக் கண்ட பகீரதன், கல்கி குறித்து பேசி சோகச் சூழலை மாற்றினார். கல்கியின் நகைச்சுவைகளைச் சொல்லி, ஒருவாறு சமாளித்தார்.

அதில் ஒன்று, 'ஒரு வார்த்தை. ஐந்து எழுத்துகள் கொண்ட அந்த வார்த்தை. அந்த வார்த்தையைச் சொன்னாலே கண்களில் நீர் வழியும். அந்த வார்த்தை என்ன தெரியுமா? வெங்காயம் என்பார் கல்கி'' என்பது. இவ்வாறு பல நகைச்சுவைத் துணுக்குகளை பகீரதன் சொல்லி, கூட்டத்தைக் கலகலப்பாக்கினார்.

அந்த மாங்கனியை கல்கியின் நினைவாக, பல ஆண்டுகள் வைத்திருந்தார் பகீரதன். அது சுருங்கி காய்ந்துவிட்டது. மாங்கொட்டை கறுப்பாகி, அதன் மீது தோல் மட்டுமே ஓட்டிக் கொண்டிருந்தது. இருந்தாலும், அதை ஒரு சந்தனப் பெட்டியில் வைத்திருந்தார் பகீரதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments