அன்றே நாகரிக வாழ்க்கை!
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள காரிச்சாத்தான் ஊராட்சிக்குள்பட்ட மலையடிப்பட்டி வைப்பாறு கரையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகள் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள காரிச்சாத்தான் ஊராட்சிக்குள்பட்ட மலையடிப்பட்டி வைப்பாறு கரையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகள் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மலையடிப்பட்டி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்ட நாகரிக வாழ்க்கை முறை நிலவியதை உறுதிப்படுத்தும் வகையில் பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சதுரவடிவ செங்கல் கிணறு: 16 குழிகள், 2 இடுகாட்டுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கற்களாலான படிக்கட்டுகள் கொண்ட சதுர வடிவ செங்கல் கட்டுமானக் கிணறு கண்டறியப்பட்டுள்ளது. செங்கற்கள் 40 செ.மீ. நீளமும், 20 செ.மீ. அகலமும், 7 செ.மீ. கனமும் கொண்டவையாகும். இவை கீழடி, அழகன்குளம், பூம்புகார் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவில் உள்ளன.
Advertisement
Advertisement
கிணற்றின் உள்பகுதியில் நீர்மட்டம் அதிகம் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதால், மக்களுக்கான நீராதாரமாக இருந்திருக்கக்கூடும். படிக்கட்டில் உள்ள தேய்மானம் நீண்ட ஆண்டுகள் மக்கள் இந்தக் கிணற்றைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. தொடர் ஆய்வுக்குப் பின்னர் கிணற்றின் முழு ஆழம் தெரியவரும்.
இதற்கு முன் 1930-ஆம் ஆண்டு கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் 6 ரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இங்கு கிடைத்துள்ள பொருள்கள் கி.மு. 5 அல்லது 6- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செங்கல் கட்டமைப்புகள்: 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய செங்கல் கட்டமைப்புகள், உறைக் கிணறுகள், முதுமக்கள் தாழி, கருப்பு - சிவப்பு மண்பாண்டங்கள், பானை ஓடுகள், இரும்பு ஆயுதங்கள், மண் வெட்டிகள், ஈட்டி முனைகள், இரும்பு காலப் பொருள்கள், வெண்கலப் பொருள்கள், தங்க மணிகள், செவ்வகப் பகடைக்காய், அழகிய சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், சுடுமண்ணாலான தக்களிகள், சுடுமண் விளையாட்டுப் பொம்மைகள், செம்பு நாணயங்கள், பழங்கால வளையல்கள், சங்கு வளையல்கள், மயில் வடிவ அலங்காரப் பொருள்கள், உயர்தர வெண்கலத் தகடு துண்டுகள் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இந்தப் பகுதியில் இரும்பு உருக்குத் தொழிலும், நெசவுத் தொழிற்கூடங்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பதை ஆய்வுக் குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அரிய பொருள்கள்: சங்க கால தமிழர்களின் வாழ்வியலையும், தொழில்துறை சிறப்பையும் பறைசாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அரிய தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் கரிமப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன்பிறகே உறுதியான முடிவுகள் தெரியவரும். அந்தக் கால எழுத்துகள் பற்றிய எழுத்தறிவு, சமூக வாழ்க்கை மற்றும் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முக்கியச் சான்றாகும்.
தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, மலையடிப்பட்டியில் கிடைத்துவரும் சான்றுகள் சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டறியப்பட்ட நாகரிகச் சான்றுகளுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.
குறிப்பாக, செங்கல் கட்டமைப்புகள், உறைக் கிணறுகள், எழுத்துப் பொறிப்புகள், உலோகப் பொருள்கள் ஆகியன சங்க கால மக்களின் வாழ்வியல் முறையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.
இதுகுறித்து நேரில் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், 'கீழடி அகழாய்வைப் போலவே மலையடிப்பட்டி அகழாய்வுகளிலும் தமிழர்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கான ஆதாரம் அதிகம் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வுப் பணி மூலம் கீழடி போல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு பெரும் நாகரிகம் இருந்ததை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு வணிகம் நடைபெற்ற ஆதாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலப்பரப்பு சங்க காலத்தோடு தொடர்புடையது' என்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.