தரமான தோல்... தரமான இசை
பறை என்பது ஒரு கருவி மட்டுமல்ல; அது தமிழரின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உயிர்ப்பான அடையாளம்.
ஆர். ரங்கபாஷ்யம்
பறை என்பது ஒரு கருவி மட்டுமல்ல; அது தமிழரின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் உயிர்ப்பான அடையாளம். தஞ்சாவூர், மதுரை - திண்டுக்கல்லின் பறையாட்டம், சிவகங்கையின் எருதுகட்டு மேளம், கோவையின் துடும்பாட்டம், திருப்பூர் - ஈரோட்டின் மொடா மேளம் என ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான தோல் இசை மரபுகளைக் கொண்டுள்ளன.
கடந்த 23 ஆண்டுகளாக மண்ணிசைக் கலை, தோல் இசைக்கருவிகள், நாடகம் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளோடு வாழ்ந்து வரும் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல், கருவி தயாரிப்பாளர், கைவினைக் கலைஞர், பயிற்சியாளர், ஆராய்ச்சியாளர் என பன்முகத் தன்மைகளோடு திகழ்கிறார் மு. குருநாதன். அவர் கூறியதாவது:
Advertisement
Advertisement
'பறை இசை என்பது தமிழர் பண்பாட்டின் உயிர்மூச்சாக உள்ளது. மண்ணிசைக் கருவிகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்ததால், பாரம்பரிய நாதத்தின் இயல்புகள் குறையத் தொடங்கின.
இதன் விளைவாக, இனிமையான இயற்கை ஒலி குறைந்து, அதிக இரைச்சல் உருவானது. தோல் கருவிகளின் இசைத் தன்மை பாதிக்கப்பட்டது. கலைஞர்கள் நீண்ட நேரம் இசைக்கும்போது உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்தன. இதனால் பல பாரம்பரிய இசைக்கருவிகள் பயன்பாட்டிலிருந்து விலகின. பறை இசைக் கருவிகள் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரமும் சவால்களை எதிர்கொண்டது. கால்நடை வளர்ப்பு குறைதல், செயற்கைக் கருத்தரித்தல், புதிய நோய்களால் கால்நடைகளின் தோல் பாதிக்கப்பட்டு அதன் வலிமை குறைதல் போன்ற காரணங்களால் கருவிகளில் பயன்படுத்தப்படும் தோல்கள் விரைவில் சேதமடையும் நிலை ஏற்பட்டது.
அறிவியலும் பாரம்பரியமும் இணைந்த ஆராய்ச்சி
இதற்கு அறிவியல் அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை அறிந்து, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் சதீஷ் மூலம் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முயற்சிக்கு இயக்குநர் முனைவர் தணிகைவேலன், வழிகாட்டி முனைவர் மதன், முனைவர் மகேஷ் குமார் ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கினார்கள்.
பல ஆண்டுகளாக நான் சேகரித்திருந்த கள அனுபவங்கள், தொழில்நுட்பச் சவால்கள், மண்ணிசைக் கருவி தயாரிப்பாளர்கள், கலைஞர்களின் தேவைகளை அறிந்ததுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தோல் இசைக்கருவி தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை ஆராய்ச்சிக் குழுவுடன் சேர்ந்து கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பி, கலைஞர்கள், கருவி தயாரிப்பாளர்கள், கைவினைக் கலைஞர்களை நேரில் சந்தித்து, மூன்று ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் மூலம் தோல் தேய்மானத்தைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பமும், பூஞ்சை தாக்கத்திலிருந்து பாதுகாப்பு, பாரம்பரிய நாதத்தைப் பாதுகாக்கும் மேம்பட்ட பதனிடும் முறை, தீயில் வாட்டினாலும் தரம் குறையாத தோல், பல வண்ணங்களில் அழகியல் தரத்துடன் தயாரிக்கும் முறை, ஈரப்பதத்திலும் நீடித்த செயல்திறனும் கண்டறியப்பட்டன.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்றவகையில் தயாரிக்க சிஎஸ்ஐஆர், சிஎல்ஆர்ஐ மூலம் கருவி தயாரிப்பாளர்களுக்கு தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டு பறைக் கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. நினைவுப் பரிசுகளாக வழங்கக்
கூடிய சிறிய அளவிலான மாதிரிகளில் மண்ணிசைக் கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் பறை இசைக்கருவி தயாரிப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த ஆராய்ச்சியில் கிடைத்த அனுபவங்கள் பெரும் மகிழ்ச்சியாக அமைந்தன.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தோல் இசைக்கருவி தயாரிக்கும் கைவினைஞர்களுக்கான கருத்தரங்கில் 50- க்கும் மேற்பட்ட இசைக்கருவி தயாரிக்கும் கைவினைஞர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
நாளைய தலைமுறை
மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த மாற்றம் நமது மரபையும், நமது நாதத்தையும் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். அறிவியலும் பாரம்பரியமும் ஒன்றிணையும் போது மட்டுமே மண்ணின் கலைகள் அடுத்த தலைமுறைக்கும் உயிரோடு பயணிக்க முடியும். பாரம்பரிய நாட்டுப்புற இசைக்கருவிகளுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.
இதன் மூலம் கருவிகளின் விலை குறைந்து, கலைஞர்கள், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும். மண்ணிசைக் கருவி தயாரிக்கும் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் கடன், மானியம், தொழில் மேம்பாட்டு நிதி, நவீனக் கருவிகள் வாங்குவதற்கான சிறப்பு உதவித் திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.'' என்கிறார் மு.குருநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.