ஜப்பானில் சைவத் திருமடம்
உலகமே ஜப்பானை தொழில்நுட்பத்தின் உச்சமாகப் பார்க்கிறது.
சுஜாதா மாலி
உலகமே ஜப்பானை தொழில்நுட்பத்தின் உச்சமாகப் பார்க்கிறது. ஆனால், அம்மக்களின் இதயத்தில் உள்ள பாரம்பரியமான ஆன்மிக உணர்வோ, அவர்களை பாரதத்துக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக் கோயில்களை நோக்கிப் பயணிக்கும்படி ஈர்த்து வருகிறது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.
ஆம்..! அண்மைக்காலமாக நம் நாட்டுக் கோயில்களையும், சைவத் திருமடங்களையும் நோக்கி அந்நாட்டவர் வருகை அதிகரித்து வருகிறது. இது வெறும் ஆன்மிகப் பயணம் என்பதைத் தாண்டி, ஆன்மாவைத் தேடும் ஒரு பயணமாக அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கற்றுக் கொள்வது, தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொள்வது, திருமுறைப் பாடல்களைப் பாடுவது என் இயல்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் தருமபுரம் ஆதீனம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமாணி தேசிக சுவாமிகளை அணுகினோம். அவர் கூறியது:
Advertisement
Advertisement
'எல்லாம் வல்ல இறைவன் எல்லையற்றவன். அந்த இறையைத் தேடும் மனிதனுக்கும் எல்லை தேவையில்லை. எனவேதான் இனம், மொழி, மதம், தேசம் கடந்து எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய சிவபெருமானின் திருவடியில் நம்அனைவராலும் ஒன்றாக நிற்க முடிகிறது. கடந்த சில வருடங்களாக ஜப்பான் நாட்டவர்களின் வருகை நம்நாட்டுக் கோயில்களை நோக்கி அதிகரித்துள்ளது என்பது உண்மை.
அவர்கள் நம் நாட்டுக் கோயில் வழிபாடுகளையும் மரபுகளையும் மதிக்கிறார்கள். சித்தாந்தக் கொள்கைகளினால் ஈர்க்கப்படுகின்றார்கள். தொடக்கத்தில் கோயில்களைப் பார்க்கிற சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள்தாம். ஆனால், இன்று பலர் நம்முடைய தினசரி வழிபாடுகளை மேற்கொள்கிற அளவுக்கு மாறி வருகிறார்கள்.
இயல்பாகவே பெரும்பாலான ஐப்பானியர்கள் கடவுளின் வழி (காமி) எனப்படும் 'ஷிண்டோ'வைப் பின்பற்றுகிறவர்கள் இல்லையா? அதன்படி இயற்கையின் அனைத்துக் கூறுகளையும் இறையின் சக்தியாகக் காண்கிறவர்கள் அவர்கள். அதே அடிப்படையில் இயற்கையையே சிவத்தின் வெளிப்பாடாக உணருவது நம் மரபு. ஃபூஜி மலையை நோக்கி தலைவணங்கிடும் மனமும், கைலாய மலையைச் சிவமாகக் கருதி கைகூப்பிடும் மனமும் ஒரே புள்ளியில் சங்கமிப்பதில் வியப்பேதும் இல்லை. அதனால்தான் அவர்களுக்கு நம் சைவத்தின்மேல் இவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் இருந்து ஒரு குழுவினர் நம்முடைய கோயில்களைத் தரிசிப்பதற்காக ஆன்மிகப் பயணமாக வந்தனர். அப்பயணத்தில் தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள கோயில்களையும் தரிசித்திருக்கிறார்கள். அந்தநாள் நல்ல கிருத்திகை தினம். நமக்குச் சொந்தமான மயிலாடுதுறை குமரக்கட்டளை முருகப் பெருமானைக் கண்டு வழிபட்டவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் அங்கிருந்த நம்முடைய கட்டளைத் தம்பிரான் சுவாமியிடம் நிறைய விஷயங்களைப் பேசித் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக நம்முடைய திருமடத்தையும் விருப்பமாகக் காண்பதற்கு வந்தார்கள்.
இங்குள்ள பிரமாண்டமான மடாலயம், குரு மடத்தின் பூஜை முறைகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், அன்னம் பாலிப்பு என ஒவ்வொன்றாகப் பார்த்து வியந்தவர்கள், பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு மகிழ்வுடன் புறப்பட்டார்கள். ஆனால், வெகு சில மாதங்களுக்குள்ளேயே மீண்டும் திருமடத்துக்கு வந்து எங்களைத் தொடர்பு கொண்டார்கள். இம்முறை கூடுதலாக பலர். நம்முடைய மடத்தில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. மிகுந்த ஆர்வத்துடன் காண வந்த அவர்களுக்கு தகுந்த உபசரிப்புகள் செய்தோம்.
திருமுறைப் பாடல்கள் சிலவற்றை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்கள். உடனே பாடிக் காட்டினார்கள். தங்களுடைய நாட்டுக்குச் சென்றவர்கள் தொடர்ந்து எங்களைத் தொடர்பு கொண்டார்கள். இந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நாமும் பிரத்யேகமாக அவர்களுக்கு தேவாரப் பாடல்களைக் கற்றுக் கொடுப்பதற்காக இணைய வழி மூலம் வழிகாட்டி உதவினோம். பிறகு ஓரிரு மாதங்களுக்கு உள்ளாகவே இவர்களைப் பார்த்த பலர், மீண்டும் அதிகமான ஆர்வத்துடன் இங்கு வந்தார்கள். இங்கு நடைபெறும் கோ, அஜ, கஜ, அசுவ பூஜைகளைப் பார்த்து வியப்படைந்தார்கள்.
நம்முடைய பூஜை முறைகளைக் கற்றுக் கொண்டு அதனைப் பின்பற்ற விரும்பினார்கள். கூடுதலாக பலர் தங்களுடைய இயற்பெயர்களையும் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டதுதான் உச்சகட்ட வியப்பு. இதன் தொடர்ச்சியாக கடந்த சிவராத்திரி பூஜைகளில் வந்து கலந்துகொண்டதுடன், முறையாக தீட்சைப் பெற்றுக் கொண்டு சணிகலிங்க பூஜையைத் துவங்கியதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
2022 -இல் மதுரையில் நடைபெற்ற சிவராத்திரி விழா நிகழ்வில் 150 அன்பர்கள் சைவ நெறி பூண்டு ஆசி பெற்றார்கள். 58 அடியார்கள் சைவ தீட்சை பெற்றார்கள். இப்படி நிறைய..!
இன்று அவர்கள் தங்கள் பெயர் மட்டும் அல்ல. வாழ்வியல் முறைகளையே சைவர்கள் போல மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். புலால் உணவுகளை உண்பதில்லை. சைவத்துக்கு ஒவ்வாத நெறிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். திருநீறு, ருத்திராட்சம், பூணூல் அணிகிறார்கள். இப்படி ஏராளமான மாற்றங்கள்.
இந்தக் குழுவில் இருப்பவர்களில் பலர் அங்கு மருத்துவர்கள், பொறியாளர்கள், உயர்பதவி வகிப்பவர்கள். ஆனால், மிகவும் எளிமைப்படுத்திக் கொண்டு தங்களை சைவ அடியார்கள் போல மாற்றிக் கொண்ட இயல்பு ஆச்சரியமானது.
நம்நாட்டவர், ஜப்பான்வாழ் அன்பர் - பாண்டிச்சேரி சுப்பிரமணியம் பிள்ளை என்பார் மூலம் ஏற்பட்ட கோயில் சுற்றுலா நிகழ்வு ஒன்றுதான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு முக்கியக் காரணம்.
குறிப்பாக, கூனிக்கோ கவாக்ஷீமா என்கிற அன்பர் இங்கு வந்த பிறகு நம்முடைய குருமூர்த்திகள் வசம் ஆட்கொள்ளப்பட்டு விட்டார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஜப்பானிய ஆன்மிகக் குருவான அவர் இங்கு முறைப்படியான தீட்சைகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய இயற்பெயரை 'பாலகும்ப குருமணி' என்று மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
நம்முடைய சைவ நெறியைக் குடும்பத்துடன் பின்பற்றும் இவருக்கு தக்கபடி முறையான ஆகம தீட்சை, ஆசாரிய உபதேசங்களை அளித்து சுந்தரவேடமும் கொடுத்திருக்கிறோம். தற்பொழுது 'ஜப்பான் சிவ ஆதீனம்' என்கிற பெயரில் ஒரு மடத்தை நிர்வகித்து வருகிறார். நம்முடைய தருமையாதீனத்தைக் குருபீடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த ஆதீனத்தின் கீழ் பல ஜப்பானியர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
நம்முடைய ஆதீன விழாக்கள் அனைத்திலும் பங்கெடுத்துக் கொள்வதிலும் ஆர்வத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் இம்மடத்தினர், ஆதீனத்தின் அருட்பணிகளைப் பாராட்டி தஞ்சாவூரில் விழா எடுத்துச் சிறப்பித்ததும் இங்கு மகிழ்சியுடன் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜப்பானைச் சார்ந்த பெக்கி என்பவருக்கு விசேஷ தீட்சை அளித்து, 'நித்யசுஹாசினி அம்பாஜீ' எனும் திருநாமம் சூட்டி, ஆசி வழங்கியுள்ளோம். அவர்கள் ஆன்மிகப் பணிகளுக்காக வாங்கியுள்ள தீவுக்கு 'பரமேஸ்வரா தீவு' எனப் பெயர் சூட்டி இருக்கிறோம்.
நம்நாட்டுப் பாரம்பரியமான கோயில்களை ரசிப்பதோடு நின்றுவிடாமல் சைவ நெறிசார்ந்த வழிபாட்டு மரபுமுறைகளையும் ஏற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்கிற ஆர்வம் வெகு வேகமாக அவர்களிடையே பரவி வருகிறது. 'அன்பே சிவம்' என்கிற திருமந்திர தத்துவத்தின் அடிப்படையில் அந்த உணர்வை நாம் மதிக்கிறோம். ஏற்றுக் கொள்கிறோம். அவர்களுக்கு ஆன்மிகத்தில் வழிகாட்டுகிறோம். தற்பொழுது தங்களது நாட்டில் பெரியதொரு முருகன் கோயிலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான கும்பாபிஷேக விழாவை நடத்திக் கொடுப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
பொதுவாக, 'குளோபலைசேஷன்' எனப்படும் உலகமயமாக்கல் பற்றி நாம் எப்படிக் கருதுகிறோம்? உணவு, உடை, தொழில்நுட்பம், பொருளாதாரம் எனப் பல விஷயங்களில் ஏற்படும் பரிமாற்றங்களைப் பற்றி இதன் அடிப்படையில் சிந்திக்கின்றோம். ஆனால், ஆன்மிகத் துறையிலும் 'ஸ்பிரிச்சுவல் எக்சேன்ஜ்' எனப்படும் இத்தகு பரிமாற்றம் நிகழும் என்பதற்கு சமகால உதாரணம் இது. ஒரு காலத்தில் நாடுகளுக்கிடையே தொழில்நுட்பப் பகிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது.
இப்போது ஆன்மிகப் பகிர்வு தொடங்கியிருக்கிறது. இதனை மனிதநேயம் அதிகரிப்பதற்கும்; மக்கள்வளம் செழிப்பதற்கும் உண்டான மிகப்பெரிய முன்னெடுப்பாகப் பார்க்கிறோம். அந்த மிகப் பெரிய உலகளாவிய சமூக மாற்றத்துக்கான அறிகுறிதான் இது.'
இவ்வாறு விவரித்தார் தருமபுரம் ஆதீனம்.
'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!'
என்கிறது திருமந்திரம்.
இது மனிதர்களுக்கு இடையேயான மதமாற்றம் இல்லை. ஆன்மிக மலர்தலால் ஏற்பட்ட மனமாற்றம் என்பதைச் சிந்தித்தபடி தருமை குருமகா சந்நிதானமவர்களை வணங்கி விடைபெற்றோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.